ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காததற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வமே : அமைச்சர் குற்றச்சாட்டு..

KAMARAJ MINI
ரே‌ஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காததற்கு ஓ.பன்னீர்செல்வமே காரணம் என்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் குற்றம்
சாட்டியுள்ளார். பொது விநியோக திட்டம் மற்றும் சிறப்பு விநியோக திட்டம் மூலம் பொருட்கள் வழங்குவதற்கு ஆண்டு தோறும் ரூ.5,500 கோடி தமிழக அரசு மானியம் வழங்குகிறது.அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்எண்ணைய் ஆகியவை பொது விநியோக திட்டம் மூலமும், பருப்பு, பாமாயில் ஆகியவை சிறப்பு விநியோக திட்டம் மூலமும் விநியோகிக்கப்படுகிறது.

அப்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். 20 நாட்கள் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமாக அவர் முடிவெடுக்க தவறிவிட்டார்.ஜனவரி 2-ந் தேதி கோட்டையில் இது தொடர்பாக கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பு விநியோக திட்டம் குறித்து கோரிக்கை வைத்தோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அதை ஏற்க வில்லை.

என்ன காரணத்தினால் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. அவர் மனதில் இருந்த நஞ்சு இப்போது தான் வெளிப்பட்டு இருக்கிறது. தி.மு.க. என்ன நிலை எடுக்கிறதோ அதே நிலையைத்தான் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கிறார்.அதனால் ரே‌ஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காததற்கு ஓ.பன்னீர் செல்வமே காரணம்.எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 2-ந் தேதி பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பும், 1½ கோடி லிட்டர் பாமாயிலும் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.பருப்புக்கு 10-ந் தேதியும், பாமாயிலுக்கு 13-ந் தேதியும் டெண்டர் விடப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு நிலைமை சீராகும்.இதை தெரிந்து கொண்டுதான் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பொது விநியோக திட்டத்தை குறை கூறுவதற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அருகதையும் இல்லை. ஒரு வாரத்தில் பருப்பு, பாமாயில் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் கிடைக்கும். இவ்வாறாக நிருபர்களிடம் அ.தி.மு.க.தலைமை கழகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமது குற்றசாட்டை கூறினார்.

Leave a Response