மீனவர் சுட்டுக்கொலை!-ஸ்டாலின் கண்டனம் …இலங்கைக்கு எச்சரிக்கை!!!..

stalin
ஸ்டாலின் இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும் மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசியதில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 21 வயதே ஆன பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மீனவர் சரோன் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் வெளியான தகவல் கேட்டு மிகவும் வேதனையடைந்துள்ளேன்.வாழ்வாதாரம் தேடிச் செல்லும் மீனவர்களின் உயிரைப் பறிக்கும் மனித நேயமற்ற கொடூரச் செயலாகும். “இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு” என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லையோ என்று கருதும் அளவிற்கு இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது. “குண்டுமாரி பொழிந்தார்கள்” என்று சம்பவத்தை பார்த்த மீனவர்கள் அளித்த பேட்டி கண்களைக் குளமாக்குகிறது.

இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரத் தாக்குதல் ராமநாதபுரம் பகுதி மீனவ கிராமங்களில் மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. மீன் பிடிக்க கடலுக்குள் சென்றால் திரும்பி உயிருடன் வர முடியாதோ என்ற பீதியை மீனவ மக்கள் மத்தியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் என்று அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கை ராணுவம் இப்போது மீனவர்களை சுட்டுக் கொல்வது என்று முடிவு எடுத்து செயல்படுவதை மத்திய அரசு இனிமேலும் ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

“இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இலங்கை ராணுவத்தின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் கடும் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும்” என்று இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று மிகுந்த மனவேதனையுடன் தமது அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Leave a Response