பெய்யென பெய்யும் குருதி – திரைப்பட விமர்சனம்:

peiyena-peiyum-kurudhi
புதுமுக நட்சத்திரங்களை வைத்து ஒரு அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘பெய்யென பெய்யும் குருதி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுதாக்கர் சண்முகம் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி அவரே இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்கள் ஜனா, சீனிவாசன், ஹரிஷ், ராபின் மற்றும் கணேசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சீனிவாசன் மற்றும் கணேஷ் பாபுவும், படத்தொகுப்பை ஜோமின் மேத்யு கையாண்டுள்ளனர். ஜோஸ் பிராங்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தில் நடக்கும் ஒரு கதைகளம். கதை பயணிக்கும் சுற்றுப்புற கிராமங்களில் மனிதர்களுடைய இதயம் அறுத்து எடுக்கப்படுகிறது என்பது தான் கதையின் ஆரம்பம். இந்த கொடூர செயல் நடந்த சில நேரங்களில் ஐந்து நபர்கள் காவல்துறையினரிடம் சிக்குகின்றனர். காவல் துறையினர் தனித்தனியே அவர்களிடம் விசாரணை மேற்கொள்கின்றனர். விசாரணையில் அனைவரும் சொல்லும் அடையாளங்களில் அவருடைய செல்போன் ரிங் டோன் மற்றும் கழுத்தில் உள்ள காயம் பொருந்துகிறது.

கைது செய்யப்பட ஒவ்வொருவரும் சொல்லும் கதையே விசாரணை காட்சியாக வருகிறது. இந்த கொலைகளின் தலைவன் எவ்வாறு ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுக்கிறார் என்ற காட்சியை பார்க்கும்போது நமக்கே ஒரு சந்தேகம் வருகிறது, அதாவது தீவிரவாதிகள் இந்த பாணியை தான் பின்பற்றுகிறார்களோ என்று. அந்த தலைவன் முதலாவதாக உழைக்க குடியவனாக தேர்ந்தெடுக்கிறான், இரண்டாவதாக சமுதாயத்தில், அதாவது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தாரால் ஒதுக்கப்படுகிறவராக இருப்பவர். மூன்றாவது பொருளாதாரத்தில் பின்தங்கியவனாக இருப்பவன். இந்த மூன்றுக்கும் ஒப்பானவனை தேர்ந்தெடுக்கிறார் அந்த தலைவன்.

இந்த கொலையாளிகளை ஆசை காட்டி ஈர்பவனாக வருகிறான் அந்த தலைவன். உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், எலியின் இதயத்தை அறுத்து கொண்டுவந்தால் அந்த நபருக்குருபாய் பத்து லட்சம் தருவதாக ஆசை காட்டுகிறார். அவ்வாறு எலியின் இதயத்தை கொண்டுவருபவருக்கு வாக்கு கொடுத்ததை போல் அவர்களுக்கு அந்த பணத்தையும் கொடுத்துவிடுகிறார் அந்த தலைவன். இந்த காட்சியை பார்க்கும்போது பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தோன்றும் இவ்வாறு தான் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றனர் என்று…

காவல் துறையினரிடம் சிக்கியவர்கள் உண்மையில் மனிதர்களின் இதயத்தை அறுத்து எடுத்தார்களா? அவர்கள் குற்றவாளிகளா?? நிரபராதிகளா??? என்பது பார்வையாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது படத்தின் க்ளைமாக்ஸ்.

புதுமுக நடிகர்கள் அனைவரும் அவர்கள் பாத்திரங்களை தத்ருபமாக செய்துள்ளனர். கதைக்கு பொருந்தும் வகையில் கலர் டோன் அமைத்து ஒளிப்பதிவு செயப்பட்டுள்ளது. மக்களை சிந்திக்கவைக்க கூடிய ஒரு முக்கிய கதை களம் தான் இந்த படம். படத்தில் ஒரு பெண்மணியும் இல்லை என்பது படத்தின் ஸ்பெஷாலிட்டி.

படத்தில் 90 சதவிகிதம் உரையாடலாகவே அமைத்துள்ளது, பார்வையாளர்களை சற்று சோர்வடைய செய்யலாம். வசனங்கள் ரொம்ப நீண்டவை என்பது படத்துக்கு ஒரு பெரிய மைனஸ். திரைகதை மற்றும் வசனத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிக பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.

மற்றப்படி படத்தை இயக்கிய விதமும், நடிகர்களின் நடிப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்.

Leave a Response