சென்னை 28 2 விமர்சனம்


chennai-600028-first-look

சென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது.

’சென்னை 28’ல் வந்த ஷார்க்ஸ் கிரிக்கெட் அணியினரில் சில வேலைக் காரணமாக பிரிந்துவிட கார்த்திக் (சிவா), பழனி (நிதின் சத்யா), கோபி (விஜய் வசந்த்) ஏழுமலை (அஜய்ராஜ்), ரகு (ஜெய்), சீனு (பிரேம்ஜி) ஆகியோர் மட்டும் நெருக்கமான நட்பைத் தொடர்கிறார்கள். ரகுவையும் சீனுவையுன் தவிர மற்றவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கிறார்கள்.

ரகுவுக்கு காதலி அனு (சானா அல்தாஃப்) உடன் திருமணம் நிச்சயமாகிறது.  ரகுவின் திருமணத்துக்காக தேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார்.

ஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து ஜெய் திருமணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் குடும்பத்தினரிடம் எப்படி மாட்டி முழிக்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் மீண்டும் அதே கிரிக்கெட் எப்படி காப்பாறுகின்றது என்பதை செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.

சென்னை 28’ அளவுக்கு அதன் இரண்டாம் பாகமும் ஜாலியாக, ரகளையாக இருக்கிறது என்று சந்தேகமின்றி சொல்லலாம். அதிலிருந்த கிரிக்கெட், அதனால் ஏற்படும் போட்டி மனப்பான்மை, நட்பு, செண்டிமெண்ட், எமோஷன், காதல், கிளாமர், வயிறு வலிக்கும் காமடி என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறது.

அதோடு இந்தப் படத்தில் அதிக கதாபாத்திரங்களை சேர்த்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளும் கொஞ்சம் அதிகம். நாயகர்கள்(ஷார்க்ஸ் அணியினர்) அனைவருக்கும் ஜோடி உண்டு. அதோடு அவர்களது எதிர்ப்பு கோஷ்டியில் இருப்பவர்களுக்கும் வலு அதிகம்.

படம் தொடங்கும்போது இந்த ஒன்பது ஆண்டுகளில் உலகிலும் நம் வாழ்க்கை முறையிலும் கிரிக்கெட்டிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் சொல்லி அவர்களை அறிமுகப்படுத்துகிறது வெங்கட் பிரபுவின் வாய்ஸ் ஓவர். அதிலேயே பல ஜாலி, கேலி சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டு ’இது அனைத்து கவலைகளையும் மறந்துவிட்டு ஜாலியாகப் பார்ப்பதற்கான படம் ’என்ற மனநிலையை ஏற்படுத்திவிடுகிறார். குறிப்பாக பழனியின் மனைவி யார் என்பதற்கு முதல் பாகத்திலிருந்து ஒரு தொடர்பை ஏற்படுத்திய விதம் சபாஷ் போட வைக்கிறது.

படம் நெடுகவே முதல் பாகத்தின் பகுதிகள் மிகச் சரியான இடங்களிலும் சரியான அளவில் ரசிக்கத் தக்க வகையில் இணைக்கப்பட்டு இது ஒரு அசலான இரண்டாம் பாகம் என்று பாராட்ட வைக்கிறது.

முதல் பாகத்தைப் போலவே இதிலும் மூன்று கிரிக்கெட் போட்டிகள் விரிவாக காண்பிக்கப்படுகின்றன. அதில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியின் எதிரிகளாக இருந்த ராக்கர்ஸ் அணி இரண்டாம் பாகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படவா கோபியின் கமெண்ட்ரியும் இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான காட்சிகள் அனைத்துமே கலகலப்புக்கும் பரபரப்புக்கும் முழு உத்தரவாதம். குறிப்பாக் கிரிக்கெட் ரசிகர்கள், லோக்கல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் இவற்றுடன் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு ரசிக்க முடியும்.

நாயகர்களின் மனைவியாக/காதலியாக வரும் பாத்திரங்களும் படத்துக்கு கலகலப்பூட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காதல்/எமோஷனல் காட்சிகளுக்கும் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் ஆடும் அழகை அவர்களது மனைவிகளே கலாய்ப்பதும் ஆலோசனை சொல்வதும் அதகளம்.

ஜெய்யின் காதலியின் குடும்பத்தினராக வருபவர்களும் அவர்களது செய்கைகளும் இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம். அவர்கள் சீரியஸான ஆட்களா அவர்களும் காமடிக்குத்தானா என்று குழப்பம் வருகிறது.

படத்தில் ஆங்காங்கே வெடித்து சிரிக்க வைப்பதோடு, நட்பு, காதல், குடும்பம், ஒவ்வொரு மனிதனும் தன்னை நிரூபித்துக்கொள்வதற்கான தனிமனிதத் தவிப்பு ஆகியவற்றை ஒட்டிய எமோஷனல் காட்சிகளும் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு இயக்குனராக வெங்கட் பிரபுவின் மிகப் பெரிய பலம் இதுதான். அவரால் காமெடி, சீரியஸ் என்று இரண்டையும் சரியாகச் செய்ய முடியும். இரண்டையும் சரியாகக் கலக்கவும் முடியும். எது எப்போது வரும் என்று ஊகத்திலேயே வைத்திருந்து ஆங்காங்கே ஆச்சரியங்களையும் தர முடியும். அவை அனைத்தும் இந்தப் படத்தில் சரியாகப் பயன்பட்டிருக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு ஏற்படும் தொய்வு, இரண்டாம் பாதி கொஞ்சம் நீளமாக இருப்பது, அடுத்து என்ன நடக்கும் என்று பல இடங்களில் எளிதாக ஊகிக்க முடிவது, சில திருப்பங்கள் வசதிக்கேற்ப நிகழ்வது, சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் என்று குறைகளும் இருக்கின்றன. தேனியில் நடக்கும் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் இன்னும் கொஞ்சம் நம்பகத்தன்மையுடனோ அதிக சுவாரஸ்யத்துடனோ இருந்திருக்கலாம்.

படத்தில் ஒரு நடிப்புப் பட்டாளமே இருக்கிறது. ஜெய்க்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் என்று சொல்லலாம். அந்தப் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிர்ச்சி சிவாவுக்கு இது மிகச் சரியான கம்பேக் படம் என்று சொல்லலாம். அவர் தன் பாணியிலான காமெடி வசனங்களில் அதகளப்படுத்துகிறார். அதோடு அவர் பாத்திரத்தை வைத்து இணையதள திரை விமர்சகர்களை கலாய்த்திருக்கும் விதம் செம்ம கலாய்.

வில்லனைப் போன்ற வேடத்தை ஏற்றிருக்கும் வைபவ் தேனி வட்டார வழக்கில் மட்டுமல்ல,உடை, உடல்மொழி, எக்ஸ்பிரஷன் என அனைத்திலும் மதுரைத் திமிர் நிறைந்த அடாவடி இளைஞனை அப்படியே கண்முன் நிறுத்தி சபாஷ் வாங்குகிறார்.

பிரேம்ஜி நகைச்சுவைக்கு கச்சிதமாகப் பயன்பட்டிருக்கிறார். தன் வழக்கமான பாணியிலேயே காமெடி செய்தாலும் எங்கும் அலுப்பு ஏற்படவில்லை. நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்ராஜ், அரவிந்த் ஆகாஷ், மஹத், கார்த்திக், அபினய் வட்டி, சுப்பு பஞ்சு, சந்தான பாரதி டி.சிவா என அனைவரும் தத்தமது பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் ஷார்க்ஸ் அணியை தோற்கடிக்கும் அணியின் சிறுவனாக வந்த ஹரி பிரஷாந்த் இந்தப் படத்தில் இளைஞானாக வந்து தனி முத்திரை பதிக்கிறார்.

சிவாவின் மனைவியாக விஜயலட்சுமி, நிதின் சத்யாவின் மனைவியாக கிருத்திகா, அஜய்ராஜின் மனைவியாக மகேஷ்வரி, ஜெய்யின் காதலி சானா அல்தாஃப் (அறிமுகம்), விஜய் வசந்தின் மனைவியா அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள். மணிஷா யாதவ், ‘சொப்பன சுந்தரி’ பாடலில் கவர்ச்சியை அள்ளித் தந்து இளைஞர்களை கிறங்கடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு. ‘சொப்பன சுந்தரி’ பாடலும், ’வரோம் சொல்லு தள்ளி நில்லு’ பாடலும் கேட்க நன்றாக உள்ளன.

நீண்ட நாட்களுக்கு பிறகு செம்ம ஜாலியாக ஒரு கதைக்களம், அதற்கு திரைக்கதை அமைத்த விதம் சிறப்பு .ஜெய், சிவா, விஜய் வசந்த் என அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடித்துள்ளனர், ப்ரேம்ஜி மற்ற அண்ணன் படத்தை விட அதிகம் அடக்கி வாசித்துள்ளார், அதுவும் சென்ற பாகத்தில் கேட்ஸ் போல், இதில் ஒரு பந்தை தேக்கும் காட்சி சூப்பர். கிரிக்கெட் சம்மந்தப்பட்ட காட்சிகள், பின்னணி இசை சூப்பர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு. ‘சொப்பன சுந்தரி’ பாடலும், ’வரோம் சொல்லு தள்ளி நில்லு’ பாடலும் கேட்க நன்றாக உள்ளன. ஆனால் சென்ற பாகத்தில் இருந்த யதார்த்தம் மற்றும் அதிரடி பாடல்கள் மிஸ்ஸிங்

மொத்தத்தில் குறைகளைக் காட்டிலும் நிறைகளே அதிகமாக இருப்பதாலும் பல இடங்களில் ரசித்து கைதட்டி சிரிக்க முடிவதாலும் திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு ஜாலியான படம் பார்த்த நிறைவு ஏற்படுகிறது.


 

Leave a Response