மாவீரன் கிட்டு – திரை விமர்சனம்


maaveeran-kittubanner12வெற்றிப் படங்களையும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களையும் கொடுத்துள்ள இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் ’மாவீரன் கிட்டு’ தீர்க்க முடியாத தீவிரமான பிரச்சனையாகவும் கடந்த நூற்றாண்டில் இருந்த சாதிப் பிரச்சனையைப் பேசுகிறது. சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், அநீதிகளையும்கதைக் களமாகக் கொண்டுள்ளது இந்தப் படம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் 1980களில் நடக்கிறது கதை.

கீழக்கோட்டை என்ற பகுதியில் வசிக்கும் தலித் மக்கள் மீது ஊர் நாட்டாமையும் (நாகிநீடு)ஆதிக்க சாதிக்கார்களும் எண்ணற்ற ஒடுக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர். உள்ளுர் எஸ்ஐ ஆக இருக்கும் நாட்டாமையின் மகன் (ஹரீஷ் உத்தமன்) ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக சட்டத்தை வளைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

இவற்றை எதிர்த்து நியாயமான வழிகளில் போராடுகிறார்  தலித் மக்களில் படித்தவரான சின்ராசு (பார்த்திபன்). அவரால் படிக்கவைக்கப்படும் கிருஷ்ணகுமார் என்கிற கிட்டு (விஷ்ணு விஷால்) 12ஆம் வகுப்பில் மாநிலத்தின் அளவில் முதல் இடம் பிடிக்கிறான். ஐஏஎஸ் அதிகாரி ஆகும் லட்சியத்துடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான்.

கல்லூரியில் அவனுடன் படிக்கும் ஆதிக்க சாதிப் பெண் கோமதி (ஸ்ரீதிவ்யா) அவன் மீது காதல்கொள்கிறாள். சாதி வேற்றுமை பார்க்காதவரான அவளது அப்பாவும் இந்தக் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் அவர் திடீரென்று கொல்லப்படுகிறார்.
ஆதிக்க சாதியினர் கொலைப் பழியை கிட்டு மற்றும் அவன் நண்பர்கள் மீது  போட்டு அவர்களைக் கைது செய்ய வைக்கின்றனர். ஜாமீனில் வெளிவரும் கிட்டு, எஸ்ஐயுடன் ஏற்படும் ஒரு மோதலில் காணாமல் போகிறான்.

கிட்டுவை மீட்க வேண்டும் என்று தலித் மக்கள் சின்ராசு தலைமையில் காவல்நிலைய வாசலில் அமர்ந்து போராடத் தொடங்குகின்றனர்.

போராட்டம் வெற்றியடைந்ததா? கிட்டுக்கு என்ன ஆனது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் திரையில் காண்க.
தலித் முதியவர் ஒருவரின் பிணத்தை அடக்கம் செய்ய பொதுப் பாதையில் பயணிக்கும் உரிமைக்கான தலித் மக்களின் சட்டப் போராட்டம்தான் படத்தின் தொடக்கக் காட்சி.

அதைத் தொடர்ந்து வரும் சாதிய ஒடுக்குமுறைக் காட்சிகள், அதை ஒடுக்கப்படுபவர் எதிர்கொள்ளும் விதம், தாழ்த்தப்பட்டவர்  ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரின் உயிரைக் காப்பாற்றிய பிறகும் அவரைத் தொட்டுவிட்டதால் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை, சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிரான பதறவைக்கும் ஆணவக் கொலை என சொல்லப்பட்ட விஷயங்களும்  அவை சொல்லப்பட்ட விதமும் சரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் காட்சிகள் ஊகித்தபடிய நகர்ந்தாலும் அவற்றின் அழுத்தம் அதை மறக்க வைக்கிறது.

முதல் பாதியில் இவ்வளவு எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டு இரண்டாம் பாதியில் எங்கெங்கோ திசை மாறிப் பயணிக்கிறது திரைக்கதை.  நாயகன் தொலைந்துபோவதும் அதற்கு சொல்லப்படும் காரணமும் அதற்குப் பின்னால் உள்ள திட்டமும் ஏற்றுக்கொள்ளும்படியே இருக்கின்றன. ஆனால் அவற்றைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம். முன்னுக்குப் பின் காட்சிகளை அடுக்கிய விதத்தில் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்திருந்தால் பார்வையாளர்களுக்கு சில ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் கிடைத்து அதன் மூலம் இன்னும் படத்துடன் ஒன்றிப் பார்த்திருக்க முடியும்.

அதோடு இரண்டாம் பாதியில் நாயகனின்  இனத்துக்கான போராட்டத்தையும் அவனது காதலையும் இணைத்து காட்சிகளை நகர்த்திய விதம் படத்துக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொல்ல வந்த விஷயம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் மட்டுப்படுகிறது.

காதல் கூடாது என்பதில்லை. ஆனால் இதுபோன்ற தீவிரமான விஷயங்களைப் பேசும் படங்களில் காதல் காட்சிகள் கதையுடன் முற்றிலும் பொருந்துவதாக இருக்க வேண்டும். கமர்ஷியல் காரணங்களுக்காகவும், படத்தின் நீளத்தைக் கூட்டவதற்காகவும் சேர்க்கப்பட்டவை போன்ற உணர்வைத் தரக் கூடாது.

பேசப்பட வேண்டிய விஷயத்தைப் பலர் பேசத் தயங்கும் விஷயத்தைக் கையில் எடுத்திருப்பதற்காக சுசீந்திரனைப் பாராட்டலாம். ஆனால் அதை பார்வையாளரிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான அழுத்தம் திரைக்கதையில் முழுதாகக் கைகூடவில்லை என்பதே வருத்தத்துக்குரிய உண்மை.

விஷ்ணு விஷால் நல்ல கதைகளை வித்தியாசமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதை இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறார். நடிப்புக்குப் பெரிய சவால் இல்லை என்றாலும் ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு அனைத்து வகைகளிலும் நியாயம் செய்திருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா கிராமத்துப் பெண் வேடத்துக்கு அழகாகப் பொருந்துகிறார்.  முகபாவங்கள் பரவாயில்லை. ஆனால் வசனங்களும் உதட்டசைவும் சுத்தமாகப் பொருந்தவில்லை.

தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து கல்வி அறிவால் உயர்ந்து, அநீதிகளைத் தட்டிக் கேட்கும் போராளியாக பார்த்திபனின் கம்பீரமான தோற்றமும், உடல்மொழியும் செறிவான வசன உச்சரிப்பும்  கச்சிதமாக இருக்கின்றன.

ஆதிக்க சாதி வெறியராக நாகீநீடு சுத்தமாகப் பொருந்தவில்லை. ஹரீஷ் உத்தமனுக்கு மற்றுமொரு வழக்கமான வில்லன் வேடம்தான். சூரியிருந்தும் நகைச்சுவை இல்லை. ஆனால் எமோஷனல் நடிப்புக்கு இன்னும் கொஞ்சமாவது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சுசீந்திரனின் வசனங்கள் பல இடங்களில் கவனித்துப் பாராட்டத்தக்க அளவில் உள்ளன. “அதிகார்த்துல இருக்கறவங்கள எதிர்க்கவில, அதிகாரத்தையே எதிர்க்கறோம்”, “சட்டம் ஒழுங்கா செயல்படுத்தப்படலனுதான் சார் போராடுறோம்” என்று சில உதாரணங்கள் நினைவில் நிற்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

டி.இமான் இசையில் பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கின்றன. ’இணைவோம்’ பாடல் அது இடம்பெறும் காட்சியின் தீவிரத்தை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்த தக்க துணை புரிகிறது. அதைப் பாடியிருக்கும் பிரதீப் விஜய்யையும் பாராட்ட வேண்டும். பின்னணி இசை பல இடங்களில் சிறப்பாக உள்ளது.

அறிமுக ஒளிப்பதிவாளர் சூர்யா, கதைக்களத்துக்கும் காலகட்டத்துக்கும் பொருத்தமான ஒளிகளையும் கோணங்களையும் பயன்படுத்தி பாராட்டத்தக்க பணியை செய்திருக்கிறார். படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன் காட்சிகளின் வரிசையை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம்.

மொத்ததில் நல்ல கதை திரைக்கதை சரியான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினாலும், இந்தக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்த துணிச்சல் மற்றும் அக்கறைக்காகவும் அதை பாதிவரை சிறப்பாக சொன்ன விதத்துக்காவும் பாராட்டலாம்.


 

Leave a Response