சிவகாசி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி


சிவகாசியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் வேனிலிருந்து பட்டாசு பண்டல்களை இறக்கும் போது விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ள ஸ்கேன் மையத்துக்குள் புகை சூழ்ந்தது. இதில், அங்கிருந்த 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், பால் வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

அதையடுத்து, காயமடைந்து சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.


 

Leave a Response