குழந்தைகள் ரசித்து பார்க்கக்கூடிய படம் “பேய்கள் ஜாக்கிரதை” – திரை விமர்சனம்:

Peigal Jagirathai Review
நடிகர்கள்: கதாநாயகனாக ஜீவரத்தினம், கதாநாயகியாக ஈஷன்யா, தம்பி ராமையா, நரேஷ், “நான் கடவுள்” ராஜேந்திரன், மனோபாலா, கெஹனா வசிஸ்த், ஜான் விஜய், “ஆடுகளம்” ஜெயபாலன், தருண் குமார், “ப்ளாக்” பாண்டி.

இயக்கம்: கண்மணி, தயாரிப்பு: ஜி.ராகவன், இசை: மரிய ஜெரால்டு, ஒளிப்பதிவு: மலிக்கார்ஜின், படத்தொகுப்பு: சுரேஷ் ஆர்ஸ், பாடல்கள்: விவேகா & கபிலன் வைரமுத்து.

விமர்சனம்: ஊரிலே அனைவரும் பார்த்து நடுங்கும் அண்ணாச்சியாக வருகிறார் தம்பி ராமையா. ஆனால் இவருக்கு பேய் என்ற வார்த்தையை கேட்டாலே பயம். இந்த பயத்தை போக்க உயிர் பயம் இல்லாத ஒருவனை தன்னுடனேயே வைத்துகொள்ள முடிவு செய்கிறார் தம்பி ராமையா.

அந்த ஹீரோவுடன் சேர்ந்து நான்கு பேய்களும் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்துவிட என்ன நடக்கிறது என்பது தான் கதை. அதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் கண்மணி.

ஹீரோவாக நடித்துள்ள ஜீவரத்தினத்தின் நடிப்பில் முன்னேற்றம் தேவை. நாயகியாக நடித்துள்ள ஈஷன்யா சற்று கம்மியான காட்சிகளில் வந்தாலும் தன்னுடைநடிப்பு பணிக்கு நீதி செய்துள்ளார். தம்பி ராமையா தான் இப்படத்தின் முதல் கதாநாயகன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் படம் ஆரம்பத்தில்லிருந்து படம் முடியும் வரை கதாநாயகனுடன் கதையுடன் பயணிக்கிறார். தம்பி ராமையா காமெடியில் கலக்கியது மட்டுமின்றி, படத்திற்கு முக்கிய பலம் சேர்த்துள்ளார்.

மொட்டை ராஜேந்திரன் படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் வந்தாலும், காமெடியில் தன்னுடைய பணியை நன்றாக செய்துள்ளார். மனோபாலாவிற்கு இப்படத்தில் சொல்லும்படியான பெரிய கதாபாத்திரம் கிடையாது என்பது உண்மை.

படத்தின் முன்பாதியில் சற்று தொய்வு இருந்தாலும், இடைவேளைக்கு பின் இயக்குனர் கதையை சற்று விறுவிறுப்புடன் எடுத்து சென்றுள்ளார். மல்லிக்கார்ஜினின் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக அமைந்துள்ளது. மரிய ஜெரால்டு, தன்னுடைய பின்னணி இசையில் பார்வையாளர்களை மிரட்டி பயமுறுத்த முயற்சித்துள்ளார். படத்தின் முன்பாதியில் பயத்துடன் காமெடியை வைத்துவிட்டு, பின்பாதியில் சென்டிமென்ட்டை வைத்து க்ளைமாக்ஸை முடிப்பது இயக்குனரின் ஒரு புதிய முயற்சி.

மொத்தத்தில், படம் பார்வையாளர்களை பயப்படுதுவதைவிட காமெடியில் கொண்டு செல்லும். குறிப்பாக குழந்தைகள் ரசித்து பார்க்கக்கூடிய படம் “பேய்கள் ஜாக்கிரதை”.

Leave a Response