பாடலை நானே வெளியிடுவேன் – சிம்பு; காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா?

simbu-interview-about-beep-song

தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய பிரச்சனை சிம்புவின் பீப் பாடல் தான். தமிழகத்தில் வெள்ளம் ஒன்று ஏற்பட்டது என்பதே தெரியாத அளவிற்கு, இந்த பீப் பாடல் வெள்ளத்தையே முழ்கடித்துவிட்டது. மக்கள் என்ன ஆனார்கள், அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்ததா? இதைப்பற்றியெல்லாம் விட்டு விட்டு பீப் பாடலை வெளியிட்ட சிம்பு, அனிருத்தை கைது செய்யவேண்டும் என மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனியார் தொலைகாட்சிக்கு இன்று பேட்டி கொடுத்துள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்த பாடலை பாடியது நான் தான். இது என்னுடைய பாட்டு தான். இந்த பாடலுக்கும் அனிருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் யாரையும் தவறாக கூறவில்லை. பெண்களுக்கு ஆதரவாக தான் பாடியுள்ளேன். அவர்களை திட்டாதே, அவர்கள் ஏமாத்திட்டாங்கனு அழாதே, நீ சரியான பொண்ண தேடி லவ் பண்ணு, தப்பான பொண்ண லவ் பண்ணிட்டு நீ ஏன் அவங்கள திட்டுற. இப்படி நல்ல விதாமாக தான் கூறியுள்ளேன். நான் கெட்ட வார்த்தைகளை அதில் பீப் ஒலியுடன் தான் பாடியுள்ளேன்.

இதை நான் எனக்காக பாடியது. நான் இதை வெளியிடவில்லை. இணையத்தில் என் பாடலை யாரோ திருட்டுதனமாக வெளியிட்டுள்ளனர். நான் இதை ஆல்பமாகவோ, டிவியிலோ வெளியிடவில்லை. பின் எப்படி குழந்தைகள் கெடுவார்கள். இணையத்தில் பாடல் இருந்தால் கெட்டு விடுவார்கள் என்றால், இணையத்தில் பார்ன் கூடதான் உள்ளது. அப்போ அதை பார்க்க மாட்டார்களா? என் பாடல் தான் அவர்களை கெடுக்க போகின்றதா? எனக் கூறியுள்ளார். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் என்னைக் காயப்படுத்தி வருகிறனர். இந்த பாடலை கண்டிப்பாக வெளியிடத்தான் போறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர் காவல்துறைக்கு புகார் அளிக்கும் போது, பாடலை பாடியது அனிருத் தான் என தெரிவித்திருந்தார். தற்பொழுது அனிருத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என சிம்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்புவை டிசம்பர் 19-ஆம் தேதி கோர்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சம்மன் அனுப்பினார். ஆனால் சிம்பு கோர்டில் ஆஜராகாமல், தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ளார். சிம்பு எனக்கு பயமில்லை, நான் தவறு செய்யவில்லை என தைரியமாக பேட்டியளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து, சிம்புவை கைது செய்ய வீடு வரை சென்ற காவல் துறையினர், இதுவரை சிம்புவை கண்டுபிடிக்க கைது செய்யவில்லை. சிம்பு பயமில்லை எனக்கூறுகின்றார். ஆனால் கோர்ட் சம்மனை மதித்து இன்னும் ஆஜராகவில்லை.

ஒரு தொலைக்காட்சி சிம்புவை பேட்டி எடுக்கமுடியும் போது காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையா?. இல்லை, இருவரும் சேர்ந்து நாடகமாடுகின்றனரா?

தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவது ஒரு பக்கம் நல்லது என்றாலும், மறுபக்கம் ஆபத்தும் நிறைந்து தான் உள்ளது. நாம் தான் அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். சிம்பு பேட்டியின் போது, இப்போ இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து நீங்க என்ன பண்ணுறீங்கன்னு நான் சொல்லுறேன் பாக்குறீங்களா? என அந்த நிருபருக்கே சவால் விடுகின்றார். இவ்வளவு தெரிந்து வைத்துள்ள சிம்பு, பாடலை திருடிவிடும் அளவிற்கு எவ்வாறு கவனக்குறைவாக இருந்தார்? இன்று சிம்புவின் பாடலை திருடிய அதே குற்றவாளி, நாளை சிம்புவின் குடும்பத்தினரின் அந்தரங்க காட்சிகளை படம் பிடித்து வெளியிட்டால் இதேபோல் தொழில்நுட்ப வளர்ச்சி என சாதாரணமாக கூறிவிட முடியுமா?

தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அவ்வாறு பயன்படுத்தினால் இப்படி திருட்டு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லையே!. நமது அந்தரங்கத்தை படம் பிடித்து அது சொல்போன் மெமரியில் நீக்கப்பட்டாலும் அதை திரும்பவும் எடுக்கமுடியும், நாம் படமே பிடிக்கவில்லை எனில் அதை யாரும் திருட முடியாதே!. எனவே நாம் கவனமாக இருந்தால் சைபர் குற்றவாளிகளால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இது கூடவா சிம்புவிற்கு தெரியாமல் போயிருக்கும்? சிம்பு வெளியிடவில்லை என்றாலும், அந்த பாடலுக்கான முழுப்பொறுப்பும் சிம்புவையே சேரும். சைபர் குற்றவாளிகள் திருடுவதற்கு சிம்பு தானே வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். பின் தவறு செய்யவில்லை என்பது எப்படி நியாயம் ஆகும். நான்கு சுவற்றிக்குள் இதை செய்தாலும், இந்திய சட்டப்படி இது குற்றம் தான்.

நாளை சிம்புவை போன்றே பலரும் பாடல்களை பாடிவிட்டு, தொழில்நுட்ப வளர்ச்சி யாரோ திருட்டுதனமாக வெளியிட்டு விட்டார்கள் எனக்கூறி தப்பிக்க நினைக்கமாட்டார்களா? தமிழக மக்களின் தங்கை பாசம், குடும்ப பாசம் என நல்ல படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் டி.ராஜேந்தர். அவருடைய மகனாக இருந்துகொண்டு சிம்பு இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம்?.

தமிழின் இயல், இசை, நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதற்கு முக்கிய காரணமே இப்படிபட்ட ஆபாச பாடல்களும், படங்களும் தான். இலக்கிய நயத்துடன் வந்த பாடல்கள் மறைந்து, காமத்தையும் அர்த்தமில்லா வார்த்தைகளை உள்ளே புகுத்தினர். அதன்பின், இரட்டை அர்த்த வார்த்தைகளை பாடலில் புகுத்தினர். ஏன் என்று கேட்டால் கவிஞனின் கற்பனை திறன் என்றனர். தற்பொழுது சிம்பு அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இரட்டை அர்த்தமில்லை, ஒற்றை அர்த்தம், நேரடியான வார்த்தை என பாடல் பாடிவிட்டார். தமிழ் மெல்ல மெல்ல சாகும் என்பதற்கு இதுபோன்ற பாடல்களும், சினிமாக்களும் தான் உதாரணம்.

Satheesh Srini

Leave a Response