“அண்ணே, மன்னிச்சிருங்கண்ணே”, கவுண்டரிடம் கெஞ்சிய சௌந்தர்.

enakku veru enkum kilaikal kidaiyaathu

49ஓ படத்திற்கு பிறகு கவுண்டமணி நடித்துக்கொண்டிருக்கும் படம், “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. ஜெயராம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், சௌந்தர் . சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்தவர் சௌந்தரராஜா. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், மெட்ராஸ் பட புகழ் ரித்விகா.

கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொள்ளச் சொன்னால் கண்களை அகல விரித்து பிரமிப்பு காட்டுகிறார், சௌந்தரராஜா. “கவுண்டமணி சார், எந்த டயலாக்கையும் வாசிக்க மாட்டார், வாசிக்கச்சொல்லி கேட்பார். ரெண்டு, மூணு தடவை வாசிக்கச்சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியாக டேக் போகலாம்ணு சொல்லிடுவார். ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக் ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும் இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான் அவர் இவ்ளோ பெரிய இடத்தில் இருக்க காரணம்.

அப்பேர்ப்பட்ட திறமைக்காரர் முன்னாடி, நான் பண்ணுன கூத்தைக்கேட்டா உங்களுக்கும் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல. ஒரு சீன்ல, கவுண்டமணி சார், நான் அப்புறம் ரித்விகா காம்பினேஷன். காட்சிப்படி கவுண்டமணி சார் ரொம்ப நக்கலா எங்களைப் பத்தி பேசிட்டிருப்பார். அதைக்கேட்டு, நான் சீரியஸா, செம கோபத்துல அவரை பார்த்து முறைக்கணும். கவுண்டமணி சார், நக்கலா பேசுறப்போ, அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன் நான்.

அசால்டா, அவர் ஸ்டைல்ல, செம கெத்தா நக்கலா பேசுனப்போ, அவரோட நடிப்பையும் கெத்தான அவரோட ஸ்டைலையும் மெய்மறந்து ரசிச்சிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவரை மனசு ரசிச்சதுல
அவர் மேல எனக்கு கோபம் வர மாதிரி நடிக்க முடியல. பட்டு பட்டுன்னு சிரிச்சிட்டேன். இதே கூத்து தான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது. கவுண்டமணி சார், நான் அடிச்ச கூத்துல லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் தான், சுதாரிச்சிக்கிட்டு, ‘அண்ணே, மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக்கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம் தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார் கூட நடிச்சது எனக்கு பெரிய அனுபவம்”, என அனுபவிச்சு சொல்கிறார், சௌந்தரராஜா.

“எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”, படம் தவிர விஜயசங்கர் இயக்கும் “ஒரு கனவு போல” படத்தில் இராமகிருஷ்ணனுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார் சௌந்தரராஜா. சர்ப்ரைஸ் செய்தியாக அட்லி இயக்கும் “விஜய்59” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த 3 படங்களும் என்னோட சினிமா பயணத்தில் கண்டிப்பாக திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கையோடு சொல்கிறார், சௌந்தரராஜா.

-Satheesh Srini

Leave a Response