PK-வுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா..? மலையாள இயக்குனர் குமுறல்..!

சமீபத்தில் ஆமிர்கான் நடித்து இந்தியில் வெளியான PK படம் பிரமாதமாக ஓடி வசூலை குவித்துவருகிறது. இன்னொரு பக்கம் இந்துமத சம்பிரதாயங்களை அது புண்படுத்துவதாக கண்டனங்களும் குவிந்து வருகிறது. ஆங்காங்கே படத்திற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சென்சார் அனுமதி வழங்கியபின் ஒரு படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்கிறார்கள் சென்சார் அதிகாரிகள்.. ஆனால் மலையாளத்தில் தீபேஷ் என்கிற இயக்குனர் தான் இயக்கிய ‘பிதாவினும் புத்திரனும்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்ததால் மனக்குமுறலில் இருக்கிறார்.

காரணம் இந்தப்படம் கிறித்துவ மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என்கிறார்கள். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் இயக்குனர்..? தேவாலயத்தில் சிஸ்டர்களாக சேர்ந்து பணிபுரியும் இரு கிறிஸ்துவ பெண்களின் மனதில் ஏற்படும் யதார்த்தமான ஆசாபாசங்களை சொல்லியிருக்கிறாராம். இதுதான் சான்றிதழ் வழங்கப்படாததற்கு காரணமாம்.

சென்சார் மறுத்ததால், ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல, அங்கும் சான்றிதழ் தர மறுத்திருக்கிறார்கள். இதனால் கடைசி அட்டம்ப்ட்டாக ட்ரிபியூனலுக்கு செல்ல இருக்கிறார் இயக்குனர் தீபேஷ்.. ஏற்கனவே இரண்டு திருடர்கள் பாதிரியார்களாக வேஷம்போடும் ‘ரோமன்ஸ்’ படத்திற்கும், ஒரு பாதிரியார் சிஸ்டர் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக வெளிவந்த ‘விஷுதன்’ படத்திற்கும் வெளியே எதிர்ப்புகள் கிளம்பினாலும் சென்சார் போர்டு அவற்றிற்கு சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.