ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய மம்முட்டி..!

மலையாள சினிமாவின் மெகாஸ்டார் மம்முட்டிக்கு சொந்தமாக கேரளாவில் பதஞ்சலி என்கிற மருத்துவமனை ஒன்று உள்ளது. இதன் மூலமாக பலருக்கு இலவச மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார் மம்முட்டி.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒன்றில் சிக்கியவர்களுக்கு உதவும் விதமாக, உடனடியாக தனது மருந்து நிறுவனத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை இலவசமாக அனுப்பி வைத்தார்.

அப்படிப்பட்ட மம்முட்டியின் கண்களில் தான் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றில் பிரபல பாலிவுட் ஸ்டாரான ஆமிர்கான் நடத்தும் ‘சத்யமேவ ஜெயதே’ என்கிற சமூக நிகழ்ச்சி பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற, 15 வயதில் காதலை மறுத்த காரணத்தால் ஆசிட் வீச்சிற்கு ஆளாகி தனது அழகு முகத்தையும் அதனால் வாழ்க்கையையும் தொலைத்த, தற்போது 25 வயதாகும் லட்சுமி என்ற பெண்ணின் பரிதாப கதை அவரது மனதை தொட்டது.

உடனே களத்தில் இறங்கிய மம்முட்டி, தனது பதஞ்சலி மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் லட்சுமிக்கான சிகிச்சை பற்றியும் அதனால் ஏதும் முன்னேற்றம் கிடைக்குமா எனவும் விசாரித்தார். உடனே அமீர்கானை தொடர்புகொண்டு டெல்லி ஆக்ரா அருகில் வசிக்கும் அந்த லட்சுமி என்கிற பெண்ணை தனது மருத்துவமனைக்கு வரவழைத்து சிகிச்சையை ஆரம்பிக்க சொல்லிவிட்டார். மம்முட்டியின் உயர்ந்த குணம் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார் அந்த லட்சுமி..