மீகாமன் – விமர்சனம்

போலீஸ் ரெக்கார்டில் சின்ன போட்டோ கூட இல்லாத போதை மருந்து கடத்தல் மன்னன் அஷுதோஷ் ராணா. அவரை கண்டுபிடித்து அந்த கும்பலையே கூண்டோடு அழிக்க, அவர்களுள் ஒருவனாக மாறி வேலை பார்க்கும் அன்டர்கவர் ஆபிசராக ஆர்யா.. இந்த ஆடுபுலி ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதுதான் க்ளைமாக்ஸ்..

கேட்பதற்கு ‘போக்கிரி’த்தனமான கதை போல தெரிந்தாலும் தனது புதுவிதமான ட்ரீட்மென்ட் உத்தியால் கதையை பரபரவென நகர்த்திச்சென்றிருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி.. எல்லா நடிகருக்கும் லைப்பில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு ஆக்ஷன் படம் அமையும். ஆர்யாவுக்கு இந்தப்படத்தை குறித்துக்கொள்ளுங்கள்..

ஹன்சிகா பெயரளவுக்கு கதாநாயகி.. அவ்வளவுதான். காமெடி, காதல் எல்லாம் இருந்தால் தான் படம் வெற்றிபெறமுடியுமா என வழக்கமான அத்தனை க்ளிஷேக்களையும் அடித்து உடைத்திருக்கிறார் மகிழ் திருமேனி. வில்லன் அஷுதோஷ் ராணா, இன்னொரு அண்டர் கவர் ஆபீசர் ரமணா இருவரும் முத்திரை பாதிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அனுபமா குமாருக்கு இதில் அசத்தல் வேடம். தமனின் இசை பாடல்களில் கஞ்சத்தனம் காட்டி, பின்னணி இசையில் பிரமாண்டம் காட்டியிருக்கிறது. கோவாவின் அழகு முகத்தை மறைத்து, மற்றொரு இருட்டு பக்கத்தை காட்டியிருக்கிறது சதீஷ்குமாரின் கேமரா. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் தெரியும் சினிமாத்தனத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘மீகாமன்’ படம் ஹாலிவுட் தரத்திற்கு இணையான படம் என்றே சொல்லலாம்.