பத்து வருடங்களுக்கு முன் கடலோர கிராமங்களை புரட்டிப்போட்ட சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. அப்படிப்பட்ட சுனாமியில் சிக்கி சுழன்று கரை சேர்ந்த காதல் ஒன்றைத்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
ஊர் ஊராக நண்பனுடன் பயணம் போகும் சந்துரு, வழியில் பார்த்த ஆனந்தியிடம்(கயல்) காதல் விதையை விதைத்துவிட்டு கன்னியாகுமரி போகிறான்… காதல் ஆனந்தியையும் அங்கே இழுத்துக்கொண்டு செல்கிறது. ஒருவரை ஒருவர் தேடி களைத்து, கடைசியில் இருவரும் சந்திக்கும் நேரம் சுனாமி பேரலையில் சிக்குகின்றனர். காதல், சுனாமி இதில் வென்றது யார்..?
இந்தமுறையும் வழக்கம் போல மனதை பிசையும் ஒரு காதலையும் அதன் வலியையும் ரசிகனுக்கு காட்டிஇருக்கிறார் பிரபுசாலமன்.. புதுமுகம் சந்துரு, ஆனந்தி இருவருமே சரியான தேர்வு.. கூடவே ஒரு காமெடி நடிகராக வின்சென்ட் என்பவரும் கிடைத்திருக்கிறார். தினகரன் தேவராஜின் அடியாள் பாத்திரம் ‘செம’.
பாடல்களால் நம் காதுகளை குளிர்விக்கிறது டி.இமானின் இசை. டால்பி அட்மாஸ் ஒலியில் பின்னணி இசை, கதாநாயகனுடன் நம்மையும் அழைத்துக்கொண்டு பயணம் போகிறது. சுனாமி காட்சியில் கலை இயக்குனர் வைரபாலன் வைரமாக மின்னுகிறார்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு துல்லியம்… முகம் சுழிக்க வைக்காத, மனதை வருடுகின்ற காதல் கதை என்றாலும் பிரபுசாலமனின் முந்தைய படங்களில் இருந்த ஆழமான காதலை இதில் காணமுடியவில்லை என்பது உண்மை. இருந்தாலும் ‘கயல்’ பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று.