திருடன் போலீஸ் – விமர்சனம்

நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் ராஜேஸ்.. நிதின் சத்யா செய்த கற்பழிப்பு குற்றத்தை அவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்பதற்காக தனக்கு கீழே உள்ள ரவுடிகளை வைத்து அவரை தீர்க்கிறார் நிதினின் அப்பாவான உயர் அதிகாரி முத்துராமன்.. ராஜேஸின் கான்ஸ்டபிள் வேலை அவரது மகன் ‘அட்டகத்தி’ தினேஷுக்கு கிடைக்கிறது.

படி, படி என தன்னை டார்ச்சர் பண்ணிய தனது தந்தை இறந்ததற்காக துளியும் வருத்தப்படாத தினேஷை, தினந்தோறும் உயர் அதிகாரிகள் சொல்லும் எடுபிடி வேலைகள் கடுப்படிக்க வேலையை விட முடிவு செய்கிறார். கமிஷனரான ஆடுகளம் நரேன் தினேஷின் தந்தையின் நேர்மையை பற்றி விளக்கி, அவரது தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க சொல்கிறார். தந்தையின் சாவுக்கு தினேஷ் பழி தீர்த்தாரா என்பது க்ளைமாக்ஸ்..

தினேஷையெல்லாம் போலீசாக நினைத்து பார்க்க முடியுமா என நினைத்தால் ஸாரி.. நீங்கள் ஏமாந்து போவீர்கள்.. கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திற்கு அப்படி பிட் ஆகிறார் தினேஷ்.. அளவான ஆக்ஷன், இயல்பான காமெடி இரண்டையும் மிக்ஸ் பண்ணி நடிப்பில் முதல் மார்க்கே எடுத்து விடுகிறார் தினேஷ்.. இடைவேளைக்குப்பின் அப்பா செண்டிமென்டும் சேர்ந்துகொள்ள பின்னி எடுக்கிறார்.

கதாநாயகி என்று ஒருவர் வேண்டுமே என்பதற்காக ராஜேஷை உள்ளே இழுத்திருக்கிறார்கள்..அவ்வளவுதான்.. ஆனாலும் ஐஸ்வர்யா.. அழகுயா.. கதாநாயகியையும் தாண்டி நம்மை கவர்ந்திழுப்பவர் மொட்டை பாஸான நான் கடவுள் ராஜேந்திரன்.. வில்லத்தனம் பண்ணுகிறார், காமெடி பண்ணுகிறார், சேலைகட்டிக்கொண்டு குரூப் டான்ஸ் ஆடுகிறார்.. அதிலும் தினேஷுடன் கிளைமாக்ஸ் காமெடியில் மிரட்டியிருக்கிறார் மனிதர். கூடவே ஜான்விஜய்யும் பார்ட்னர்ஷிப் போட அதகளம் தான் போங்கள்..

தினேஷின் நண்பனாக பாலசரவணன்.. இதுவரை நடித்த படங்களில் பாலாவின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது இந்தப்படத்தில் தான். அதிலும் கான்ஸ்டபிளின் ‘கெத்’தை அவர் ரோட்டில் காண்பிக்கும் விதம் சூப்பர் தமாஷ்.

போலீஸ் அதிகாரிகளாக வரும் ஆடுகளம் நரேன், ராஜேஸ், பாண்டியநாடு முத்துராமன் என ஒவ்வொரு விதமான போலீஸ் முகம் காட்டியிருக்கிறார்கள். நிதின் சத்யாவுக்கு வில்லன் புரமோஷன் கிடைத்திருக்கிறது.. ஆனால் பாவம் தினேஷிடம் அடிவாங்குவதுதான் இவரது வேலையாகவே இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாடல்களை விட பின்னணியில் அலைபாய்கிறது. போலீஸ் கதை என்றதும் டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ் என அதிரடியாக இல்லாமல், ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் கோணத்தில் கதையை நகர்த்திய விதத்திலேயே ஏதோ வித்தியாசம் காட்டப்போகிறார் என்று நாம் நினைப்பதை படம் முழுதும் உறுதிப்படுத்துகிறார் இயக்குனர் கார்த்திக்ராஜு. மொத்தத்தில் இந்த திருடன் போலீஸ் ஆட்டம் காமெடி கலந்த சுவராஸ்யம்