விலாசம் – விமர்சனம்:

அறியாத வயதில் தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ள இருவர் செய்யும் தப்பு, அதன்பிறகு பிறந்தவுடன் அவர்களால் தூக்கி வீசப்படும் குழந்தையை எப்படி பாதிக்கிறது என்கிற ‘பழைய’ பாதை கதைதான் ‘விலாசம்’. ஆனால் ரவுடி ஒருவன் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் பெற்றோர்களை கண்டுபிடிப்பதன் மூலம் தன் விலாசத்தை தேட முயற்சிக்கும்போது சற்றே நிமிரவைக்கிறார்கள்.

ஹீரோவாக களம் இறங்கியுள்ள பவனுக்கு ரவுடி கேரக்டர் ஒன்றும் புதிதல்ல. ரவுடி ‘சீசா’வாக இதிலும் ஜமாய்த்திருக்கிறார். பாஸ்மார்க்கும் வாங்கிவிடுகிறார். ஆனால் அவரது கதாபாத்திரத்தை இன்னும் ஒழுங்குபடுத்தி இருக்கலாம். ரவுடியை காதலிக்காவிட்டால் கதாநாயகிக்கு மோட்சம் ஏது..? அதை சரியாக செய்யும் சனம் ஷெட்டி, கூடவே ஹீரோவின் பெற்றோர்களை தேடும் பணியை முடுக்கிவிடுவது சுவராஸ்யம்.

காமெடிக்கு நான் கடவுள் ராஜேந்திரன் & கோ.. போலீஸ் அதிகாரியான ஆடுகளம் நரேனிடம் அவர் சலம்பல் விடும் காட்சி செம உதார். அதிலும் அந்த காம இச்சை கொண்ட பெண்ணிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் அவஸ்தை நான்ஸ்டாப் காமெடி..

பொதுவாக சில நிமிடங்கள் காமெடி கேரக்டரில் வந்துபோகும் பாவா லட்சுமணன் இதில் படம் முழுக்க கதாநாயகனின் நண்பனாக குணச்சித்திர வேடத்தில் பயணிப்பது அவருக்கும் புதுசு.. நமக்கும் புதுசு. ஆடுகளம் நரேன் வழக்கம்போல மிடுக்கு.. துரோகமும் நட்பும் கலந்த அருள்தாஸின் கதாபாத்திரம் பவனுக்கு இணையாக ஈடுகொடுக்கிறது.

ரவிராகவின் இசையில் இரண்டு பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன. கூடவே சுஜிபாலாவின் குத்தாட்டம் சுளுக்கு எடுக்கிறது.. ரவுடி கதைக்குள் சென்டிமென்ட்டை புகுத்தி புதிய பாதையை மீண்டும் போட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கணேசன்.

ஆனால் பல வருடங்களுக்கு முன் தாங்கள் பெற்று தூக்கி வீசிய குழந்தையை மீண்டும் பார்க்கும்போது அவன் ரவுடியாக இருந்தாலும், தந்தையை விடுங்கள்.. ஒரு தாயின் மனசு நெகிழாதா? அவ்வளவு கல்நெஞ்சம் படைத்தவளாகவா இருப்பாள்? அதை கொஞ்சம் கவனித்திருந்தால் முடிவு ஏற்புடையதாக இருந்திருக்கும்.