கத்தியை தொடர்ந்து கதை சர்ச்சையில் லிங்கா ; இதுவும் பப்ளிசிட்டி ஸ்டண்டா..?

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. இவர் சின்னத்திரையில் நெடுந்தொடர்களை இயக்கி வருபவராம்.

“முதல் முறையாக ‘முல்லைவனம் 999’ என்ற சினிமா கதையை தயார் செய்து, அந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளேன். இந்த படத்தின் கதையானது முல்லைப் பெரியாறு அணை, அந்த அணையைக் கட்டிய பென்னி குயிக் வரலாற்றை பின்னணியாக கொண்டது.

எனது படத்தின் கதையை வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருப்பதற்காக கடந்த 24.2.2013 அன்று யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். இந்தநிலையில் கடந்த 2.5.2014 அன்று யூ டியூப்பில் எனது ‘முல்லைவனம் 999’ கதை, ‘லிங்கா’ என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

எனது கதையை யூ டியூப்பில் இருந்து திருடி, ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். இதனால் ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார் மேற்படி நபர்..

‘கத்தி’ படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கதை திருட்டு சர்ச்சை இப்போது ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்த கதையாக சூப்பர்ஸ்டாரின் படத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தமாதிரி சூழலில் இயக்குனர்கள் தங்கள் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்க முன்வரவேண்டும்..

அதேசமயம் உண்மை நிரூபிக்கப்பட்டால் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று பிரபலங்கள் மீது அவதூறு வழக்கு போடும் நபர்களானாலும் சரி, கதையை திருடும் இயக்குனர்களானாலும் சரி.. உள்ளே தள்ளி லாடம் கட்டுவது தான் இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும்.