“க்ளைமாக்ஸ் வரை விஜய் ஆண்டனி மறைந்து, அங்கு சலீம் தான் சிவதாண்டவம் ஆடுகிறார்” சலீம் – விமர்சனம்

டாக்டர் சலீம் வசதியான நவீன மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தாலும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து குறைந்த செலவிலான மருந்துகளை மட்டுமே கொடுக்கிறார். இதில் அதிருப்தி அடையும் நிர்வாகம் அவரை எச்சரிக்கிறது..

அதேசமயம் சலீமுக்கு நிச்சயிக்கப்பட்ட நவநாகரிக பெண்ணோ, தான் விரும்பிய நேரமெல்லாம் சலீம் தன்னுடன் சினிமா, பார்ட்டி என சுற்றவேண்டும் என நினைக்கிறாள்.. ஆனால் சலீமின் வேலைப்பளு மற்றும் உதவிசெய்யும் குணம் காரணமாக பலமுறை அவரால் தனது காதலியின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் நான்கு கயவர்களால் பலாத்காரத்துக்கு ஆளான் பெண்ணை காப்பற்றி தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார் சலீம்.. இதனால் வழக்கம்போல தனது காதலியை சந்திக்க வருவதாக சொன்ன அவரால் குறித்த நேரத்துக்கு வர இயலாமல் போகிறது. அதுவே அவரது திருமணம், பத்திரிகை அடித்த கையோடு நிற்பதற்கும் காரணமாகிறது.

இன்னொரு பக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணை வெளியேற்றுவதோடு சலீமையும் வேலையைவிட்டு தூக்கி அவமானப்படுத்துகிறது மருத்துவமனை நிர்வாகம். இவ்வளவு நாள் அமைதியாக இருந்த சலீம் தனது அமைதிப்பாதையில் இருந்து அதிரடி ரூட்டுக்கு மாறுகிறார்..

பாதிக்கப்பட்ட பெண்ணை சீரழித்த மந்திரி மகன் உட்பட நால்வரையும் ஒரு பைவ்ஸ்டார் ஹோட்டலில் சிறைவைத்து, உண்மையை உலகுக்கு உணர்த்த முயற்சிக்கிறார். ஒரு பக்கம் மந்திரியும் இன்னொரு பக்கம் போலீசும் தங்களது வலையில் அவரை சிக்கவைக்க முயற்சிக்கின்றனர்.. சலீம் அதிலிருந்து தப்பினாரா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

‘நான்’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப்படம் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி தன்னால் ஒரு கதாபாத்திரத்தை எந்த அளவுக்கு பிரதிபலிக்க முடியும் என்பதை உணர்ந்தே அதற்கேற்ற வகையில் தனது ‘சலீம்’ கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால் அவர் ரொமான்ஸ் பண்ணவில்லையே, காமெடி பண்ணவில்லையே என அவரது நடிப்பை எந்த ஒரு இடத்திலும் குறைசொல்ல நம்மால் முடியவில்லை.

இடைவேளைக்குப்பின் க்ளைமாக்ஸ் வரை விஜய் ஆண்டனி மறைந்து, அங்கு சலீம் தான் சிவதாண்டவம் ஆடுகிறார். குறிப்பாக தனது பெயருக்கு போலீசாரிடம் அவர் விளக்கும் கொடுக்கும் இடம் சரியான சாட்டையடி. வெல்டன் விஜய் ஆண்டனி..

தனக்கு வரப்போகும் கணவன் தன் எதிர்பார்ப்பில் 10 சதவீதம் கூட பூர்த்தி செய்யமுடியாதவனாக இருப்பதை கண்டு கொதிக்கின்ற, கோபப்படுகின்ற ஒரு மாடர்ன் பெண்ணாக கதாநாயகி அக்ஸா பார்தசானி நிறைவாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குணச்சித்திர காதாபாத்திரமாக மிளிரும் சாமிநாதன், கோபத்தில் உருமும் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், உருட்டல், மிரட்டல் மந்திரியாக வரும் இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர், கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி என கதாபாத்திர தேர்வுகளும் கச்சிதம் தான்..

விஜய் ஆண்டனியின் இசையில் மூன்று பாடல்கள் ரசிக்கவைக்கின்றன என்றாலும் பல இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் பின்னணி இசை நம்மை படத்துடன் ஒன்றச்செய்கிறது.

குற்றவாளிகளை பிணைக்கைதிகளாய் கடத்திவைத்து நீதியை நிலைநாட்டும் பழைய கதைதான் என்றாலும் போரடிக்காத விறுவிறுப்பான திரைக்கதையால் அதை சமன் செய்திருக்கிறார் இயக்குனர் நிர்மல் குமார்.. தன்னை பார்க்க தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு நிச்சயமாக இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருகிறான் இந்த சலீம்.