ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி – விமர்சனம்

ஒரு புதிய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்லும் வித்தியாசமான படம் தான் இந்த ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.

வாத்தியார் அடித்ததால் தன பையன் பரத்திற்கு படிப்பே வேண்டாம் என ஒண்ணாம் வகுப்போடு நிறுத்தி விடுகிறார் சித்த வைத்தியரான அவரது தந்தை.. படிக்காததால் நண்பர்கள் உட்பட பலரால் ஏமாற்றப்படுகிறார் பரத். அதனால் தனக்கு மனைவியாக வரப்போகிறவள் படித்த பெண்ணாக இருக்கவேண்டும் என நினைத்தாலும் அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள்..

ஒரு வழியாக காலேஜ் வாசலில் நின்று நந்திதாவை செலக்ட் பண்ணி அவரது தந்தையிடம் டாக்டர் என பொய் சொல்லி பெண்கேட்டு கல்யாணமும் பண்ணிவிடுகிறார் பரத். இவர்கள் வாழ்க்கை இனி எப்படி பயணிக்கும் என்பதை காமெடியோ காமெடியாக சொல்லியிருக்கிறார்கள்.

பரத்துக்கு இது 25வது பட(மா)ம். தனது 25வது படத்துக்கு இப்படி மெனக்கெட்ட நடிகர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். படத்தில் தம்பி ராமையா உட்பட 22 காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தினார்கள் அல்லவா.. ஒரு திருத்தம்.. பரத்தையும் சேர்த்து மொத்தம் 23பேர்.

நண்பர்கள் எவ்வளவுதான் துரோகம் பண்ணி ஏமாற்றினாலும் அதை ஜஸ்ட் லைக் தட் மன்னித்துவிடும் பரத்தின் கேரக்டர் முட்டாளா அல்லது கூமுட்டையா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். இவர் டாக்டர் என்று பொய் சொல்வாராம். அதை என்ன ஏது என்று விசாரிக்காமல் தம்பி ராமையா தனது பெண் நந்திதாவை கட்டிகொடுப்பாராம்.

அதைவிட மாப்பிள்ளை வீடு பார்க்க திடுதிப்பென்று பெண் வீட்டார் வர, உடனே தங்களது சித்த வைத்திய சாலையை ஆஸ்பத்திரி ரேஞ்சுக்கு மாற்றி செட்டப் செய்து பரத்திற்கு கைகொடுக்கிறாராம் அவரது தாயாக நடித்திருக்கும் ரேணுகா. படிக்கத் தெரியாத நந்திதாவுக்கு பிப்டீன் தவுசனுக்கும் பிப்டி தவுசனுக்கும் வித்தியாசம் தெரியாதாம். ஆனால் ஐமபதாயிரத்தை மட்டும் சரியாக எண்ணிக் கொடுக்கிறாராம்..

சஸ்பென்சாக இருக்கட்டுமே என மாப்பிள்ளை பரத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் அனைத்து கருவிகளும் வசதிகளும் கொண்ட கிளினிக் ஒன்றை உருவாக்கி, சஸ்பென்சாக பரத்தை அழைத்து வந்து அதிர்ச்சி கொடுக்கிறாராம் படிப்பறிவே இல்லாத தம்பி ராமையா.. அதிர்ச்சி பரத்துக்கல்ல.. நமக்குத்தான்.. அந்த க்ளினிக்கிற்கும் பரத் தினசரி வந்து நோயாளிகளை பார்க்க உட்கார்ந்து விடுகிறார் பாருங்கள்.. அதுதான் ஹைலைட்.

விட்டதை பிடிப்பது என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பிடித்ததை விடுவது என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? அதைத்தான் இந்தப்படத்தில் தம்பிராமையா கேரக்டர் செய்திருக்கிறது.. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் பார்த்தவர்கள், இந்தப்படத்தை பார்க்கும்போது அதை தெளிவாக புரிந்துகொள்வார்கள்.

இந்தப்படத்தின் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர் கால் நூற்றாண்டுக்கு முன் இந்த கதையை தயார்செய்துவிட்டு அதை அப்படியே மறந்து தூங்கிவிட்டார் போல.. இப்போது யாருக்கு சமர்ப்பணம் செய்ய இந்தப்படத்தை எடுத்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம்..