‘புலிப்பார்வை’ மூலம் பள்ளி மாணவன் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கலாமா..?

‘புலிப்பார்வை’ படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என பல தமிழ் அமைப்புகளும் சில அரசியல் கட்சிகளும் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றன.. இதனால் மிரண்டுபோன படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள், படத்தில் ஆட்சேபிக்கத்தக்கதாக சொல்லப்படும் காட்சிகளை மாற்றம் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலசந்திரனை ஒரு ஆயுதம் ஏந்திய போராளியாக காட்டியதற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து அவர் சீருடை அணிந்திருப்பதாக வரும் காட்சிகளை மாற்றுவதாக இயக்குனர் பிரவீண் காந்தி கூறியுள்ளார்.

இதற்காக இன்று நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்த அவர், “இது புலிகளுக்கு எதிரான படம் அல்ல. நிச்சயம் தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படமாகத்தான் இருக்கும். பாலசந்திரன் சீருடை அணிந்துள்ள காட்சி ஒரு சிங்கள ராணுவ அதிகாரியின் கற்பனையில் இடம்பெறுவது மாதிரியான காட்சிதானே தவிர அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.

ஆனாலும் அந்தக்காட்சிகளில் மாற்றம் செய்யும் வேலைகளில் இறங்கிவிட்டோம். நானும் தமிழன் தான்.. நிச்சயம் தமிழர்களுக்கு எதிரான ஒரு படத்தை நான் தரமாட்டேன் என்றார். இந்தப்பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தப்படத்தின் தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதன், வேந்தர் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி டி.சிவா ஆகியோருடன் இந்தப்படத்தில் பாலசந்திரனாக நடித்த பள்ளி மாணவனும் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் “புலிப்பார்வை பிரச்சனை சம்பந்தமாக பாலசந்திரனாக நடித்த இந்த பள்ளி மாணவனையும் அழைத்துக்கொண்டு சுற்றுவதால் அவனது படிப்பு கெடாதா, இந்தப்பிரச்சனையால் அவனது எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகாதா என கேட்டதற்கு சற்றே தடுமாறிய இயக்குனர் பிரவீன் காந்தி, “உண்மைதான்.. நீங்கள் சொல்வதை இனி கவனத்தில் எடுத்துக்கொண்டு அந்த மாணவனின் படிப்பு பாதிக்காத மாதிரி பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.