‘சிகரம் தொடு’ விழாவில் தனஞ்செயனுக்கு சத்யராஜ் வைத்த ‘சூடு’..!

‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிகரம் தொடு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மோனல் கஜ்ஜர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்..

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சத்யராஜ் பேசும்போது கார்ப்பரேட் கம்பெனிகளின் சில தேவையற்ற அக்ரிமென்ட் நடைமுறைகளை, அதிலும் குறிப்பாக இந்தப்படத்தின் தயாரிப்பாளரான யுடிவி தனஞ்செயனை வைத்துக்கொண்டே கொஞ்சம் உஷ்ணத்தோடு கேள்விகள் கேட்டார்..

“நீங்கள் எங்களிடம் ஒப்பந்தம் போடும்போது கிட்டத்தட்ட 100 விதிகளுக்கு குறையாத அக்ரிமெண்ட்டில் கையெழுத்து வாங்குறீங்க.. அதை நாங்க படிச்சு பார்க்க ஆரம்பித்தால் உங்களுக்கு கோபம் வருது. அதில் நன்றாக நடிக்க தெரியாவிட்டால் பாதியிலேயே தூக்கி விடுவோம், டப்பிங் சரியாக பேச வராவிட்டால் உங்களுக்கு பதிலாக வேறு ஆளை வைத்து பேசவைப்போம் என ரூல்ஸை அடுக்கியிருக்கீங்க.. நான்லாம் தகடு தகடுன்னு வசனம் பேசி கைதட்டல் வாங்கி இத்தனை வருஷமா பீல்டுல வண்டி ஓட்டிட்டு இருக்கிறவன்.. எங்களை மாதிரி சீனியர்கிட்ட அக்ரிமென்ட் வாங்குறப்ப யாரு என்னன்னு கொஞ்சம் ஆள் தராதரம் பாத்து ரூல்ஸ் போடுங்க” என பொங்கிவிட்டார்.

பின்னர் அவரே “ நீங்க என்ன பண்ணுவீங்க பாவம். இத்தனை பேரை வச்சு வேலை வாங்குறதுன்னா சாதாரண விஷயமா..? அதுக்கு இந்தமாதிரில்லாம் அக்ரிமெண்ட்ல எழுதி வாங்குனாத்தான் சேப்டி போல தெரியுது.” என தனஞ்செயனை கூல் பண்ணினார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தனஞ்செயனிடம் கேட்கப்பட்டபோது, “சத்யராஜ் சார் அதை சீரியஸாக கேட்கவில்லை. சும்மா கலாய்க்கிற மாதிரித்தான் பேசினார். ஆனால் அக்ரிமென்ட் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளில் ஒரு விதி தான். அந்த அக்ரிமென்ட் யாரிடமும் பிரச்சனை பண்ணுவதற்காக அல்ல..ஆனால் நாங்கள் வேலைபார்ப்பதும் வேலை வாங்குவதும் பரஸ்பரம் புரிந்துணர்வினால் மட்டும் தான். இந்தப்படத்திலும் அப்படித்தான் வேலை பார்த்திருக்கிறோம்.” என பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.