நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும் : ‘கனா’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன்..!

மிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறி தனது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘கனா’.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதையொட்டி நடந்த வெற்றி விழாவில் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கப்பட்டது. அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது, “நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதிலிருந்து கிடைத்தது தான்.

நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.

அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை உதவியாக செய்ய இருக்கிறோம்” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விழாவில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து ‘கனா’ படக்குழுவினர் கௌரவித்தனர்.

Leave a Response