சரபம் – விமர்சனம்

மாட்டிக்காம தப்பு பண்றதுன்னா நான் ரெடி என ‘ஆடுகளம்’ நரேனின் மகள் சலோனியை 30 கோடி ரூபாய் கேட்டு கடத்துகிறார் நவீன் சந்திரா.. இதற்கு அப்பாவை வெறுக்கும் சலோனியும் உடந்தை. பணம் கைக்கு வந்ததும் சலோனியை கண்கள், கைகளை கட்டி நடு ரோட்டில் இறக்கிவிட்டுப்போகிறார் நவீன்.

அன்றிரவே சலோனி யாராலோ கொல்லப்படுகிறார். மறுநாள் காலியில் தெரியவரும் இந்த அதிர்ச்சியை நவீன் ஜீரணிப்பதற்குள் அன்றைய தினம் இரவே உயிருடன் நவீன் வீட்டிற்கு வருகிறார் சலோனி. கூடவே அவரது தந்தை நரேனும். அப்போதுதான் இறந்தது யார் என்றும், எப்படி என்றும் நரேன் மூலமாக தெரிய வருகிறது.

நரேன் பின்னிய சதி வலையால் கொலைப்பழி இப்போது நவீன் மேல் திரும்புகிறது. இந்த சதியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நவீன், எப்படி தன்னை சிக்கவைத்த நரேனுக்கு பாடம் புகட்டுகிறார் என்பதுதான் விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

நவீன் சந்திரா, புதுமுகம் சலோனி லுத்ரா இருவருமே சீட்டிங் கலையில் டிகிரி வாங்கியவர்கள் மாதிரி செயல்பட்டிருக்கிறார்கள். அதிலும் சலோனியின் கேரக்டர் திருப்பம் ட்விஸ்ட் தான் என்றாலும் ஏற்னவே பார்த்தது தான். ஆடியன்ஸ் தியேட்டரில் பார்த்து யூகம் செய்யுங்கள்.

சென்சார் சர்டிபிகேட்டும் ‘ஆடுகளம்’ நரேனும் இல்லாமல் படம் வெளிவராது என்பதுபோல இன்றைய படங்களின் தேவையாய் மாறிப்போயிருக்கிறார் நரேன்.. கம்பீரத்துடன் கூடிய அழகான வில்லத்தனம். அவரது அடியாட்களாக வருபவர்களில் ஒருவர் காமெடியுடன் நம் கவனம் ஈர்க்கிறார்.

விறுவிறுப்பான கதையை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண்மோகன்.. ஆனால் அடிக்கடி பிளாஸ்பேக்கில் சொல்லப்படும் ரிப்பீட் காட்சிகளை ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக சொல்லியிருந்தால் பார்த்த காட்சிகளையே திரும்ப திரும்ப பார்க்கும் அலுப்பு குறைந்திருக்கும். ஆனால் படம் பார்க்கும் சாதாரண ரசிகனை மனதில் வைத்து அப்படி செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் கடைசிவரை சஸ்பென்ஸுடன் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கும் அருண்மோகன் பாராட்டுக்குரியவர் தான்.

பின்குறிப்பு : இனி அடுத்தடுத்த தங்களது தயாரிப்புகளில் ஒரே மாதிரியான கதையின் களத்தை( சீட்டிங் செய்து பணம் சம்பாதிப்பது) கையாள்வதை தயாரிப்பாளர் சி.வி.குமார் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.