மலையாளப்படத்திற்கு சச்சின் வழங்கிய கெளரவம்..!

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்குமுன் வெளியாகி கிரிகெட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம் ‘1983’. ‘நேரம்’ பட ஹீரோவான நிவின்பாலி நடித்த இந்த படம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்தது.. ‘வெண்ணிலா கபடி குழு’வையும் ஜாக்கிசான் நடித்த ‘கராத்தே கிட்’டையும் இணைத்து அதற்கு கிரிக்கெட் முலாம் பூசினால் அதுதான் ‘1983’.

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பையனின் பெற்றோர்களும், தங்கள் மகனின் எதிர்காலம் அவனது விருப்பம்போல அமையவேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும், ஏன் அவர்கள எதிர்காலம் தங்களது விருப்பம் போலதான் அமையவேண்டும் என்று அதிகாரமாக நினைக்கும் பெற்றோர்களும் கூட இந்தப்படத்தை ஒருமுறை கட்டாயம் பார்க்கவேண்டும்.

‘நேரம்’ பட புகழ் நிவின் பாலி தான் கதையின் நாயகன்.. சிறுவயதிலிருந்தே, குறிப்பாக ‘1983’ல் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியதில் இருந்தே நிவினுக்கு கிரிக்கெட் தான் உயிர் மூச்சு.. லேத் வைத்து நடத்தும் அவரது தந்தைக்கோ மகனை இஞ்சினியராக்கி பார்க்கவேண்டும் என்பது விருப்பம்.
ஆனால் பையன்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மட்டையுடன் சுற்றும் நிவின் படிப்பை மட்டுமல்ல, தன்னையே சுற்றிவரும் காதலியையும் கோட்டை விடுகிறார்.

காலம் சுழல்கிறது.. ஒருநாள் ஏதேச்சையாக தனது ஏழு வயது மகன் கண்ணன் தென்னை மட்டையால் பந்தை அடித்து விளையாடுவதையும் அவன் கைகள் பேட் சுழற்றும் லாவகத்தையும் பார்க்கிறார் நிவின்.. அவ்வளவுதான்… இழந்த ஒன்றை திரும்ப பெற்றுவிட்டோம்.. அல்லது பெறப்போகிறோம் என அவரது கண்களில் மின்னல் அடிக்கிறது.

இறுதியாக தான் இழந்ததை, தன் தந்தை தனக்கு தராததை, தனது மகன் விரும்பியதை நிறைவேற்றினாரா என்பதுதான் உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ். இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைனுக்கு இது முதல் படம்.. ஆனாலும் முதல் படத்திலேயே சிக்ஸர் விளாசியிருந்தார்.

சமீபத்தில் இந்தப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் சச்சினை சந்தித்து தங்களது ‘1983’ படத்தின் டிவிடியை அவருக்கு வழங்க விரும்பினார்கள். சச்சினும் அந்தப்படத்தைப்பற்றி கேள்விப்பட்டிருந்தபடியால் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களை பாராட்டி அவர்களிடம் இருந்து ‘1983’ படத்தின் டிவிடியை பெற்றுக்கொண்டார்.