சுசி அண்ணே.. உங்க கதை 1983ஆ..? 2014ஆ..? சொல்லுங்கண்ணே சொல்லுங்க….

சுசீந்திரன் தற்போது கிரிக்கெட்டை மையமாக வைத்து விஷ்ணு நடிக்க ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.. சமீபத்தில் இந்தப்படத்தை பற்றிய தகவல்களை ஒரு வார இதழில் சொல்லியிருந்தார் சுசீந்திரன்.. அதில் ஒரு சில பாயிண்ட்டுகளை இங்கே பார்ப்போம்..

1. எட்டு வயசுல ஆரம்பிச்சு தன் 15 வருஷ கிரிக்கெட் பயணத்தை ஹீரோ சொல்றதுதான் படம்..

2. சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்துட்டுப்போற பொண்ணு இல்ல ஸ்ரீதிவ்யா.. பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, வேலைக்கு போற பொண்ணுன்னு படம் முழுக்க மூணு பருவத்துல வருவாங்க..

3. படம் பார்த்தபிறகு உங்க பையனோ தம்பியோ பேட் எடுத்துட்டு விளையாட போகும்போது அவங்க கிட்ட நின்னு ஒரு நிமிஷம் பேசத்தோணும்.

4. கிரிக்கெட்ல ஒரு முனைல நல்ல பேட்ஸ்மேன்.. மறுமுனைல ஒரு பௌலர் நின்னு போட்டியை ஜெயிக்கவேண்டியிருக்கும். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில ஒரு முனையில விஷ்ணு.. மறுமுனையில் சூரி.. எல்லா பந்துகளையும் வேஸ்ட் பண்ணிட்டு இருப்பார் சூரி.. ஒவ்வொரு பந்துக்கும் முன்னாடி “சிங்கிள் தட்டுங்க சீனியர்”னு சொல்லிட்டே இருப்பார்..

சரி பாயிண்ட்ஸ் போதும். விஷயத்துக்கு வருவோம்.. மேலே சொன்ன அத்தனையும் கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘1983’ படத்தில் அட்சரம் பிசகாமல் அப்படியே இடம்பெற்றுள்ள காட்சிகள் தான்… இப்போ அந்த பாயின்ட்சை பார்க்கலாமா..?

1. கதாநாயகன் நிவின்பாலி கிரிக்கெட் பிளேயராக ஆகமுடியாமல் போன தனது 15 வருட கிரிக்கெட் அனுபவத்தை தான் பிளாஸ்பேக்கில் சொல்லுவார்..

2. படத்தின் கதாநாயகியான நிக்கி கல்ராணி நிவினின் பள்ளித்தோழியாக, கல்லூரி மாணவியாக, அதன் பின் வேலைக்கு போய் இன்னொருவனை மணந்துகொள்ளும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

3. இறுதியாக தான் இழந்ததை, தனக்கு கிடைக்காததை, தன் தந்தை தனக்கு தராததை, தனது மகன் விரும்பியதை நிறைவேற்றினாரா நிவின் என்பதுதான் படத்தின் உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பையனின் பெற்றோர்களும், தங்கள் மகனின் எதிர்காலம் அவனது விருப்பம்போல அமையவேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும், ஏன் அவர்கள எதிர்காலம் தங்களது விருப்பம் போலதான் அமையவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் கூட, ஒருமுறை குடும்பத்துடன் சென்று இந்தப்படத்தை பார்த்துவிட்டு வாருங்கள்..” – இது அந்தப்படத்திற்கு எழுதப்பட்ட விமர்சனம்.

4. ‘ஏபிசிடி’ படத்தில் துல்கர் சல்மானோடு சேர்ந்து காமெடியில் அதகளம் பண்ணிய ஜேக்கப் கிரிகேரி இதில் கொஞ்ச நேரமே வந்தாலும் சச்சின் என பெயர் வைத்துக்கொண்டு தனது சேஷ்டைகளால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.. இவர்தான் முதல் ஓவரிலேயே களம் இறங்கி கடைசி ஓவர் வரை ‘நின்று’ ஆடி நம்மை சிரிக்க வைப்பார்.. இவர் அனைத்து பிளேயர்களிடமும் சொல்லும் வாசகம் ‘சிங்கிள் தட்டுங்க பிரதர். நான் பார்த்துக்கிறேன்” என்பதுதான்..

இந்த பாயிண்ட்டுகள் போதும் என்று நினைக்கிறோம்… நாம் கேட்க விரும்புவதெல்லாம் அந்த பேட்டியிலோ அல்லது வேறு எந்த இடத்திலுமோ இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய இந்த ‘ஜீவா’ படம் ‘1983’ன் ரீமேக் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே என்பதைத்தான்.

ஒருவேளை இதையெல்லாம் மீறி அவர் ஒரு புதிய கதைய படமாக பண்ணியிருந்தாலும் நமக்கு சந்தோசம் தான். வரத்தானே போகிறது.. பார்க்கலாம்.