‘த்ரிஷ்யம்’ ரீமேக்கிற்கு இந்தி தயாரிப்பாளரால் புதிய சிக்கல்..!

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வருடம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படம் சூப்பர்ஹிட்டாக ஓடிநாளும் ஓடியது, அதன்பின் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆனது எல்லாமே கண்மூடி திறக்கும் நேரத்தில் நடந்துவிட்டது..

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையில் மனதைப் பறிகொடுத்த விக்டரி வெங்கடேஷ் தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிகை ஸ்ரீப்ரியாவின் டைரக்ஷனில் நடிக்க அக்ரிமெண்ட்டே போட்டு முதல் ஆளாக களம் இறங்க, இன்னொரு பக்கம் இயக்குனர் பி.வாசு ரவிச்சந்திரன், நவ்யா நாயாரை வைத்து கன்னடத்தில் ரீமேக் செய்யும் வேலைகளில் வேகம் காட்டினார்.

இதோ இப்போது கன்னடம், தெலுங்கு இரண்டிலுமே படம் வெளியாகி சூப்பர்ஹிட்டாகி உள்ளது. ஆக தென்னிந்தியாவில் மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் மூவரும் திரிஷ்யத்தின் மூலம் வெற்றிக்கனியை ருசித்துவிட்டார்கள். இப்போது தம்ழ ரீமேக்கில் நடிக்க இருக்கும் கமலும் படத்திற்கு பூஜை போட்டு ஆகஸ்டில் படப்பிடிப்புக்கு கிளம்பு இருக்கிறார்.

இப்போது பிரச்சனை கிளம்பியிருப்பது இந்தியில் தயாராக இருக்கும் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கிற்குத்தான். பிரச்சனையை கிளப்பியுள்ளவர் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர். காரணம் அவர் இந்தியில் தயாரிப்பதற்காக வாங்கியிருக்கும் ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்கிற நாவலின் கதையைப் போலவே ‘த்ரிஷ்யம்’ கதையும் இருக்கிறதாம். அதனால் சில மாதங்களுக்கு முன்னே படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்புக்கு நோட்டீஸ் அனுப்பியவர்கள், இப்போது மீண்டும் பிரச்சனையை தூசி தட்டியுள்ளார்கள்.

இதுபற்றி ஜீத்து ஜோசப் சொல்லும்போது, “நானும் அந்த நாவலை படித்தேன். இரண்டு கதைகளும் பயணிக்கும் விதம் ஒரேமாதிரி இருப்பதாக தோன்றினாலும் இரண்டின் கதைக்களமும் வேறு வேறு. ஏற்கனவே இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியவர்கள் அப்புறம் அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது தமிழில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கை ஆரம்பிக்க இருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் பிரச்சனயை கிளப்புகிறார்கள். ஆனால் நாங்கள் இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார். சீப் பப்ளிசிட்டி தேடும் அளவுக்கு சீப்பாகிவிட்டாரா ஏக்தா கபூர்..?