இருக்கு ஆனா இல்லை – விமர்சனம்:

சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வெங்கட்(விவந்த்) பைக்கில் போகும்போது சாலைவிபத்தில் சிக்கிய திவ்யாவை(ஈடன்) காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் இவர் முகத்தை பார்த்தபடி அவர் உயிர் பிரிந்துவிட இயலாமையுடன் வீட்டுக்கு வருகிறார்..

நள்ளிரவில் தான் தெரிகிறது திவ்யாவின் ஆவியும் அங்கே நடமாடுகிறது என்று.. முதலில் பயந்து நம்பமறுக்கும் வெங்கட்டை மறுநாளே தான் ஆவிதான் என நம்பவைக்கிறார் திவ்யா. போகப்போக இருவரும் பிரண்ட்ஸ் ஆகிறார்கள்.. வெங்கட்டின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறார் திவ்யா.

தான் யார் என்பதை கண்டுபிடித்து தருமாறு திவ்யா கேட்க அந்த முயற்சியில் நண்பன் மீனாட்சி சுந்தரத்தின்(ஆதவன்) உதவியுடன் இறங்குகிறார் வெங்கட். அதில் அவருக்கு ஒரு தங்கை இருப்பதும் (அவர் திவ்யா உருவத்தில் இருக்கும் காவ்யா) அவர் ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

கூடவே அங்கே இருக்கும் டாக்டர் ஒருவர், காவ்யாவின் இதயத்தை திருட்டுத்தனமாக எடுத்து இன்னொருவருக்கு வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தெரியவருகிறது. அவரை காப்பாற்ற போன இடத்தில் நண்பர்கள் இருவரும் அடிபட, இறுதியில் தன் தங்கையை காப்பாற்ற திவ்யா என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

த்ரில்லான பேய்ப்படமாக இருக்கும் என்று போனால் ஜாலியான, ஆனால் சென்டிமெண்ட்டான பேயை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். புதுமுகம் விவந்த் ஆவியாக இருக்கும் திவ்யாவின் காதலில் விழுவது புதுசு. திவ்யாவாக நடித்திருக்கும் ஈடன் முதலில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும் போகப்போக நம் மனதில் தங்கி விடுகிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் மனிஷா ஸ்ரீயை பார்க்கும்போது ‘ஆபீஸ்’ சீரியல் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

நண்பனாக படம் முழுதும் வருகிறார் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவன். பல இடங்களில் கடுப்படித்தாலும் ஒரு சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். சினிமாவுக்கு இன்னும் ட்ரெய்னிங் எடுக்கணும் பாஸ். டாக்டராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் கேரக்டர் பில்டப்புடன் காட்டப்பட்டாலும் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல இருக்கிறது.

பல படங்களில் டாக்டராக துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்த ரவிராஜ் இதில் மெயின் வில்லனாக புரமோசன் ஆகியிருக்கிறார். சுவராஸ்யம் தரக்கூடிய பேய்க்கதையை கையில் எடுத்துக்கொண்ட இயக்குனர் கே.எம்.சரவணன் காட்சிகளிலும் இன்னும் சுவராஸ்யம் கூட்டியிருக்கலாம்.