“பல இடங்களில் வசனத்துக்காக நீங்கள் கைதட்டித்தான் ஆகவேண்டும்..” சதுரங்க வேட்டை – விமர்சனம்

திறமை இருந்தால் பணம் சம்பாதிக்க யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.. ஆனால் அந்த பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.. இதுதான் சதுரங்க வேட்டை சொல்லும் நீதி..

இன்றைக்கு நாம் பேப்பரில் படிக்கும் அத்தனை நூதனமான பித்தலாட்டங்களையும் செய்து பணம் சம்பாதிக்கிறார் நட்ராஜ். ஒருகட்டத்தில் போலீசில் சிக்கி மீண்டு(ம்) சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிக்கிறார்.. ஆனால் அவரால் சதுரங்க வேட்டையில் பலியான காய்கள் ஒவ்வொன்றும் திருப்பி தாக்கி, இறுதியில் அவருக்கே செக் வைக்கின்றன. நட்ராஜின் முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்..

முன்னணி நடிகர்களை தேடிப்போகாமல் ‘நாளை’ நட்ராஜ் என்கிற கேமராமேன் நட்டியை படத்தின் நாயகனாக தேர்ந்தெடுத்ததிலேயே டைரக்டரின் தன்னம்பிக்கை பளிச் என தெரிகிறது. அதற்கேற்ற மாதிரி இந்த கேரக்டரையும் நட்ராஜை தவிர வேறு யாராலும் சிறப்பாக பண்ணியிருக்க முடியும் என்று தோணவில்லை.. படம் பாருங்கள்.. நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
0 (2)
ஒவ்வொரு முறையும் எதிராளிகளை அவர் ஏமாற்றும் லாவகம்.. அட..அடா. ஹேட்ஸ் ஆப் நட்ராஜ். ‘பப்பாளி’யில் பார்த்ததை விட இதில் பாந்தமாக நடிப்பில் அழகு காட்டியிருக்கிறார் இஷாரா.. செட்டியாராக வரும் இளவரசு நீங்கள் பார்த்திராத ஒரு புது அரசு.. விசாரணை போலீசாக வந்து வெறும் விசாரணையுடனே நின்றுவிடுவதால் ஏமாற்றம் தருகிறார் பொன்வண்ணன்.
படத்தில் ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரனுடன் சேர்த்து நடித்திருக்கும் அத்தனை புதுமுகங்களும் தாங்கள் சரியான தேர்வு என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்கள். படத்தின் வேகத்திற்கு பாடல்கள் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கும் ஷான் ரோல்டன் பின்னணியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவை பார்க்கும்போது அவர் அறிமுகம் என்பதை நம்பமுடியவில்லை.

எச்.வினோத்… மண்ணுள்ளி பாம்பு, எம்.எல்.எம், கோபுர கலசம் என இன்றைய ட்ரெண்டில் உள்ள, பேராசை கொண்ட ஜனங்களை முட்டாளாக்கி அவர்களை படுகுழியில் தள்ளுகின்ற அத்தனை குறுக்கு வழி சம்பாத்தியங்களையும் கதையில் தோரணமாக கோர்த்திருப்பதிலேயே யார் இந்த அறிமுக இயக்குனர் என கவனம் ஈர்க்கிறார் வினோத்..

சீட்டிங் கதையை கையில் எடுத்துகொண்டு எந்த இடத்திலும் லாஜிக் இடிக்காமல் இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பாக அடித்து தூள் பண்ணியிருக்கிறார் வினோத்.. குறிப்பாக வசனங்கள்.. “ஜனங்க ஏமாறுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்.. அது தப்பா..”, “நான் சொன்ன பிளான் உனக்கே புரிஞ்சுருச்சுன்னா வேற பிளான் மாத்திருவேன்” என பல இடங்களில் வசனத்துக்காக நீங்கள் கைதட்டித்தான் ஆகவேண்டும்..
ரிசல்ட் : வினோத்.. இந்த வருட சினிமாவுக்கு கிடைத்த திறமைசாலி.. வெல்கம் வினோத்..!