அப்படி என்னதான் இருக்கிறது பூலோகத்தில்?

இரண்டு மாதங்களில் முடியும் படம் என்றாலும், இரண்டு வருடங்களில் முடியும் படம் என்றாலும் இரண்டிற்குமே ஒரே மாதிரியான உழைப்பை தருபவர் தான் ஜெயம் ரவி. அதற்கு பலன் கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

‘ஆதிபகவன்’ படத்துக்குப்பிறகு ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ படமும் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கிறதே.. என்கிற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு என்பதால் தாமதத்துக்கு நிச்சயம் பணம் பிரச்சனையாக இருக்காது. வேறு என்னதான் காரணம் என்பது நேற்று அவர்கள் வெளியிட்ட ட்ரெய்லரை பார்க்கும்போதுதான் தெரிந்தது.

வடசென்னையில் உள்ள குத்துச்சண்டை வீரர்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பற்றிய படம் என்பதால் மிகபிரமாண்டமான படமாக இதை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர்.

வடசென்னையின் கலாச்சார அடையாளமான ‘மயானக்கொள்ளை’யை இவர் படமாக்கியுள்ள விதம் பிரமிக்கவைக்கிறது. வழக்கமான ஜெயம் ரவி போல இல்லாமல் இந்தப்படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி பிரமிப்பு காட்டியிருக்கிறார்.

இந்தப்படத்தில் பாக்ஸ்ராக நடித்திருக்கும் ஜெயம் ரவிக்கு வடசென்னையை சேர்ந்த மதன் என்பவர்தான் பயிற்சி அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஜெயம் ரவியை பெண்டு நிமிர்த்திவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கும் த்ரிஷாவிற்கு இது அவரது வழக்கமான படங்களை தாண்டிய புது பரிமாணத்தை தரும் என்பது ட்ரெய்லர் மற்றும் பாடல்காட்சிகளை பார்க்கும்போதே தெரிகிறது. பொன்வண்ணன் இந்தப்படத்தில் வடசென்னையின் பாரம்பரியம் மிக்க பாக்ஸராக மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் காட்சிக்கேற்ற இயல்பான பாடல்களை விஜயசாகர் எழுத அதற்கு அருமையான இசையை தந்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ‘பூலோகம்’ ஜெயம் ரவிக்கு நல்ல மரியாதை செய்யும் என்பது மட்டும் நிச்சயம்.