வடகறி – விமர்சனம்

vadacurry

வெங்கட் பிரபுவின் பாணியிலேயே ஜாலியான படங்களை இயக்குவதுதான் அவரின் உதவியாளர்களின் வழக்கம். இதேதான் தற்போது சரவணராஜன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வடகறியிலும் நிகழ்ந்திருக்கிறது. நாயகனாக ஜெய் தனக்கேயுரிய ஸ்டைலில் நடிக்க, சுவாதி ஜோடியாக நடிக்க, சன்னி லியோனை ஒரு குத்துபாடலில் நடிக்க வைத்து படத்தின் ஹைப்பை ஏற்றியிருக்கிறார்கள். எதிபார்ப்பை நிறைவேற்றினார்களா?

படத்தின் கதைப்படி, ஜெய் ஒரு மெடிக்கல் ரெப். ஒரு பேசிக் மொபைல் வைத்திருப்பதால் அவருக்கு நேரும் அவமானங்கள், நல்ல மொபைல் இருந்தால் தான் ஃபிகர் உஷார் செய்யமுடியும் என நண்பர்கள் கூறும் அறிவுரை இப்படி போய்க்கொண்டிருக்கும் கதையில் ஒரு ஐஃபோன் ஜெய் கையில் கிடைக்கிறது. ஸ்வாதியோடு லவ் ஓகே ஆகிறது. திடீரென்று அந்த ஃபோனை திருப்பி ஒப்படைக்க போன இடத்தில ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? பிரச்சினைக்கு காரணமானவனை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

‘சுப்ரமணியபுரம்’ சுவாதி நாயகி. இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை போலவே இந்த படத்தின் கேரக்டரும். ரசிக்க வைக்கிறார். ஜெய்யின் பிரச்சினைகள் தெரியாமல் வேறு ஒன்றை இவராக புரிந்து கொள்ளும்போது சிரிப்பை வரவழைக்கிறார்.

ஜெய்யின் நண்பராக வந்து எப்.எம்.மில் பேசுவது போலவே சொற்பொழிவை ஆற்றி சிரிக்க வைத்து விட்டு போகிறார் ஆர்.ஜே.பாலாஜி. ஜெய்யின் மேனேஜராக ஒரு சர்ப்ரைஸ் கேரக்டரில் வந்து கலகலப்பூட்டுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஜெய்யின் அண்ணனாக அருள்தாஸ், அண்ணியாக கஸ்தூரி, தயாளனாக வரும் அஜய்ராஜ், சுவாதியின் தோழியாக வரும் மிஷா ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் சென்னை நகரின் சந்துகளையும், பாங்காக் கடற்கரை போன்றவற்றையும் அழகாகவே காட்டியுள்ளார். விவேக் சிவா, மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். நெஞ்சுக்குள்ள நீ பாடல் நன்றாக இருக்கிறது.

வெங்கட் பிரபுவின் உதவியாளர்கள் எல்லோருமே ஜாலியாக கதை சொல்வதில் மட்டுமே ஆர்வம் காண்பிப்பது இந்த படத்திலும் நிரூபணமாகிறது. நல்ல ஒரு களத்தை தொட்டு அதனை பெரிய பதட்டமில்லாமல், ரசிக்கும் விதத்தில் கொடுத்திருப்பது இயக்குனரின் பலம். தேவையில்லாத சன்னி லியோன் பாடல் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போதுள்ள இளைஞர்களின் முக்கிய பிரச்சினையில் ஆரம்பித்து, நாட்டில் உள்ள முக்கிய ஆபத்து வரை கதையில் சொல்ல வந்த இயக்குனர் அதனை மேலோட்டமாக சொல்லிவிட்டு போனதற்கு பதில், முழுநீள ஆக்ஷன் கதையாக செய்திருந்தால் இன்னும் பெரிய உயரத்தை படம் தொட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.