6 Candle – விமர்சனம்!

Six-Candles

அஜித்தின் வாழ்வில் முக்கிய படமான முகவரியை தனது முதல் முகவரியாக்கி கொண்ட இயக்குனர் துரை, அடுத்து சிம்புவை வைத்து தொட்டி ஜெயா, பரத்தை வைத்து நேபாளி படங்களை இயக்கினார். கடைசியாக இயக்கிய இந்த படங்கள் பெரிய அளவில் போகததால் சற்று இடைவெளி விட்டு மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் இறங்கியுள்ளார். மனதை ரணமாக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த 6 மெழுகுவர்த்திகள். கண்டிப்பாக பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம்.

கதை என்னவோ சின்னதாக இருந்தாலும், அதை எடுத்திருக்கும் விதம் நம்மை உட்கார வைக்கிறது. படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கி விடுகிறது. மகனுக்கும், தந்தைக்கும் இடையேயான அன்பை ஒரே பாடல் காட்சியில் விளக்கி கதைக்குள் நேராக செல்கிறார் இயக்குனர். அடுத்தடுத்த காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு பதற்றத்தை தோற்றி விடுகிறார்கள்.

ஐ.டி.யில் வேலை செய்யும் ஷாம், அவரது மனைவி பூனம் கவுர். இவர்களுக்கு ஒரு மகன். அன்பாகவும், அழகாகவும் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

பீச்சுக்கு போகும்போது தனது மகனை தொலைத்து விடுகிறார்கள். போலீஸ் நிலையத்துக்கு ஓடுகிற அவர்களிடம், ‘விசாரிக்கிறோம்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது இரக்க மனம் படைத்த அதிகாரி ஒருவர், சட்டத்தை நம்புவது வீண் என்று மாற்று வழியை காட்டுகிறார். கிடைக்கிற க்ளுவை வைத்துக் கொண்டு குழந்தையை தேடி புறப்படுகிறார் ஷாம். ஆந்திராவின் நகரியில் ஆரம்பித்து வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என்று தனது குழந்தையை தேடி ஷாம் நடத்தும் வேதனையான பயணம்தான் முழு படமும்.

இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று ஒரு புறம் பயம் வந்தாலும், மற்றொரு புறம் தன்னையறியாமல் ஆத்திரம் வருவது நிஜம். வெறும் காட்சிகளுக்காக மட்டும் கற்பனையை தட்டிவிடாமல் எங்கெல்லாம் இந்த கொடுமைகள் நடக்கிறதென தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார் துரை.

நாயகன் ஷாம். இதற்கு முன்பு இப்படிப்பட்ட படம் இவருக்கு கிடைக்கவில்லையே என்று சொல்லி ஆறுதல் பட்டு கொள்ளலாம். அசத்தலான நடிப்பு, அதற்கேற்ற உழைப்பு. கடுமையாக தன்னை வருத்தி கொண்டிருக்கிறார். அதற்காகவே ஒரு சல்யூட்.

குழந்தையும் ஷாமும் சந்தித்து விட மாட்டார்களா என்று ஒவ்வொரு வினாடியும் நம்மை ஏங்க வைக்கிறார் இயக்குனர்.

குழந்தை திருடர்களின் நெட்வொர்க் எப்படியிருக்கிறது. அவர்களின் பல்வேறு முகங்கள் என்ன? கொண்டு செல்லப்படும் குழந்தைகள் என்னவாகிறார்கள்? எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறார்கள். என்பதை அவ்வளவு தத்ரூபமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் துரை.

கிருஷ்ணசாமியின் கேமிரா படத்தின் பெரிய பலம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் நன்று. எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் மட்டுமே வெளிப்படுகிறது.

படத்தை அற்ப கமெர்சியல் காரணங்களுக்காக சிதைக்காமல் கண்ணியம் காத்து எடுத்து வெளியிட்டிருக்கும் இயக்குனர் துரை, ஷாம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.