மாநில சுயாட்சியை அடகு வைத்த திமுக எங்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை : ஜெயக்குமார்..!

மாநில சுயாட்சியை மத்திய அரசிடம் 17 ஆண்டுகாலம் அடகுவைத்த திமுக, எங்களைக் குறை சொல்வதில் நியாயம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் மக்கள்தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல கட்டமைப்பை உருவாக்குவது அரசின் பிரதான கடமை.

அதன்படி, இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலம் வழங்குபவர்களுக்கு மூன்று மடங்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. தேவையில்லாமல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் இந்த விஷயத்தை பெரிதாக்குகின்றன.

17 ஆண்டுகள் மத்தியில் இருந்து திமுகவினர் தமிழகத்திற்கு என்ன நல்லதைக் கொண்டுவந்தார்கள்? திமுக ஆட்சியில் நிலம் வாங்குவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இந்த நிலையில் திமுக எங்களை குறை சொல்வதை ஏற்க முடியாது.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடத்துகிறார் என்பதே தவறான சொல். இங்கு எம்ஜிஆர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி மட்டும்தான் நடக்கிறது. நாங்கள் எக்காலத்திலும் மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்கமாட்டோம்.

திமுக ஆட்சியில்தான் மாநில சுயாட்சி அடகுவைக்கப்பட்டது. அந்த காலத்தில் அவர்கள் என்ன உரிமையை மீட்டுக்கொடுத்தார்கள். கச்சத்தீவு, காவிரி பிரச்னை, முல்லைப்பெரியார் என அனைத்திலும் கோட்டை விட்டது திமுகதான் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response