புதுக்கோட்டையில்-குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

புதுக்கோட்டையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெற்றுக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மின் பற்றாக்குறை மற்றும் மோட்டார்கள் பழுது காரணமாக அடிக்கடி ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

அதேபோல, கீரமங்கலம் பேரூராட்சி 2-வது வார்டு பர்மா காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றும் நீர்மூழ்கி மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனையடுத்து இப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்காக அருகில் உள்ள செரியலூர் இனாம் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய ஆழ்குகுழாய் கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக நீர்மூழ்கி மோட்டார் பழுது நீக்கப்படவில்லை என்பதாலும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் கீரமங்கலம் பர்மா காலனில் உள்ள பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், “விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று காவலாளர்கள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Response