சினிமா வேலைநிறுத்தப் போராட்டம்-அரசு சார்பில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

தமிழ்ப் படவுலகில் கடந்த 46 நாட்களாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி முதல் தமிழில் புதுப்படங்கள் ரிலீஸ் செய்வது மற்றும் மார்ச் 16ம் தேதி முதல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடகஷன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் படங்களை ஒளிபரப்ப அதிகமாக உள்ள டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், தியேட்டர் டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம், பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் டிஜிட்டல் ஒளிபரப்பு விவகாரத்தில், குறைந்த கட்டணத்தில் தியேட்டரில் படங்களை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தில், 3 புதிய நிறுவனங்களுடன் தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் கையெழுத்து போட்டுள்ளது. மற்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்வு காணவும், வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தமிழக அரசு சார்பில் நாளை தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம் பங்கு பெறுகின்றன. பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து, தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தவிர, கடந்த ஒன்றரை மாதமாக புதுப்படங்கள் திரைக்கு வராத நிலையில், இனி முதலில் சென்சார் சான்றிதழ் பெற்ற படத்துக்கு ரிலீசில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எதிர்காலத்திலும் இதே வழிமுறையைப் பின்பற்றலாம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Response