‘ஐ’க்குள் நடக்கும் ‘அய்யஹோ’ விஷயங்கள்..:

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ஷனில் 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறதாம் ‘ஐ’ படம். வரும் செப்டம்பர்-15ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறாராம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இவர் ஏற்கனவே தயாரித்த ‘தசாவதாரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் முன்னிலையில் உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானை வரவழைத்து பிரம்மாண்டம் காட்டினார். இப்போது ‘ஐ’ பட விழாவுக்கு ஜாக்கிசானுடன் அர்னால்டையும் அழைத்து இன்னும் பிரம்மாண்டம் காட்ட இருக்கிறாராம்..

ஆனால் ‘ஐ’ என நீங்கள் ஆச்சர்யப்படும் இந்தப்படத்தின் உள்ளே நடக்கும் விஷயங்கள் பற்றி வெளியே கசியும் செய்திகள் ‘அய்யஹோ’ என்று சொல்லும்படியாக அல்லவா இருக்கிறது. வேலூரில் உள்ள ஒரு தியேட்டர் ஓனர் நடத்திவந்த சினிமா விநியோக கம்பெனியில் ஒரு சினிமா ரெப்’பாக தனது வேலையை தொடங்கியவர் தான் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.. இதுபோக பார்ட் டைமாக மாணவர்களுக்கு டியூசன் எல்லாம் எடுத்திருக்கிறார். இவருக்கு திரைத்துறையில் முகவரி அளித்த அந்த வேலூர் திரையரங்க உரிமையாளர் ‘மீசை’ மோகன் மறைவின் இறுதி சடங்கில் கூட கலந்துக்கொள்ள நேரம் ஒதுக்க இயலவில்லை என்பதுதான் அவருடைய அந்த நன்றிகெட்ட செயல்.

சரி விஷயத்துக்கு வருவோம்.. எந்திரனின் பட்ஜெட்டே 130 கோடிதான். ஆனால் ஐ’ படத்தின் பட்ஜெட்டோ 180 கோடி என்கிறார்கள். ஆனால் இதே ரவிச்சந்திரன் தயாரித்துள்ள விஸ்வரூபம்-2ஆம் பாகம் வெளிவர முடியாமல் பலகோடிகளை விழுங்கிக்கொண்டு கிடப்பில் உள்ளது.

இன்னொரு பக்கம் ‘சந்திரலேகா’ படம் போல நீண்டகால தயாரிப்பாக ஜெயம் ரவி நடித்து வரும் ‘பூலோகம்’ படம் வெளியிடப்படாமல் கிடக்கிறது. இப்படி கோடிகள் எல்லாம் இவற்றில் முடங்கினால் அதன் தாக்கம் ‘ஐ’ படத்தில் எதிரொலிக்காதா என்ன..?

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் நீண்ட நாட்களாக, அதாவது கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக ‘ஐ’ படத்தின் பாடலுக்காக போடப்பட்டிருக்கும் ஒரு செட் இன்னும் பிரிக்கப்படாமல் அப்டியே இருக்கிறதாம். காரணம் எமி ஜாக்சன் வந்தால் தான் இந்த பாடலை சூட் பண்ண முடியுமாம்.. அதற்கு எமிக்கு பேலன்ஸ் தொகையை செட்டில் செய்யவேண்டுமே.. அது இல்லாததால்தானே இத்தனை நாள் செட்டை பிரிக்காமல் கூட வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். சேலத்திலும், வேலூர் காட்பாடியிலும் தனக்கு சொந்தமாக இருந்த இரு தியேட்டர்களை கூட விற்றுவிட்டாரம் ரவிச்சந்திரன்.

வடிவேலு ‘கந்தசாமி’ படத்தில் சேவல் ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்து மாட்டிக்கொள்ளும்போது சொல்வாரே…”அந்த ட்ரெஸ்ஸுக்கு நான் இன்னும் தையக்கூலி கூட குடுக்கலை” என்று.. அதுபோலத்தான் இந்த செட்டிற்கு டீ, காபி சப்ளை பண்ணியவர்களின் கணக்கை கூட இன்னும் செட்டில் பண்ணாமல் இழுத்தடிக்கிறார்களாம். ஜாக்கிசானை கூப்பிடுறாக, அர்னால்டை கூப்பிடுறாக.. எங்க பாக்கிய செட்டில் பண்ணுங்கப்பா என அவர்கள் புலம்புவதை அன்றாடம் கேட்க முடிகிறதாம்.

இப்படி வேலை பார்த்தவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் செட்டில் செய்ய பணம் இல்லாதவர் அர்னால்டையும், ஜாக்கிசானையும் கூப்பிடுவது எதற்காக தெரியுமா..? எல்லாம் வியாபார தந்திரம் தான் என்கிறார்கள். அடேங்கப்பா அவர்களே வருகிறார்களே என படத்திற்கு பப்ளிசிட்டி கிடைக்கும்.. அதைவைத்து இங்கு இன்னும் பலரிடம் ஒரு பெருந்தொகையை வசூலித்து படத்தில் வேலைபார்த்தவர்களுக்கு செட்டில்செய்துவிடலாம் என்கிற கணக்குத்தானாம்.

இவர் தயாரித்த ‘தசாவதாரம்’ பட இசை வெளியீட்டு விழாவின்போது கமலுக்காக பல வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கலைஞர் வந்திருந்தார்.. கேரளாவில் இருந்து மம்முட்டி வந்திருந்தார்.. ஹாங்காங்கில் இருந்து ஜாக்கிசானே வந்திருந்தார்.. ஆனால் உள்ளூரில் இருந்துகொண்டு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் மட்டும் விழாவுக்கு வரவே இல்லை..

இத்தனைக்கும் ஜாக்கிசான் அந்த விழாவுக்கு வந்தது கமலுக்காக அல்ல.. இந்த ரவிச்சந்திரனுக்காகத்தான்.. அவரை வரவைத்துவிட்டு விழாவிற்கு இவர் போகவில்லை.. கலைஞரே எங்கேப்பா.. தயாரிப்பாளரை கூப்பிடுங்கள் என கேட்க அவரது தம்பிதான், அவர் இந்த விழாக்களில் எல்லாம் கலந்து கொள்வதில்லை என்று சொல்ல, டென்சனான கலைஞர் “அப்ப நான் மட்டும் வேலைவெட்டி இல்லாமலா வந்திருக்கிறேன்” என்று சீறிய சம்பவமும் அப்போது நடந்திருக்கிறது.

இதுதவிர உலகமெங்கும் சேர்த்து 20,000 தியேட்டர்களுக்கு மேல் ‘ஐ’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டுமிட்டிருப்பதாகவும் செய்தியை பரப்பி வருகிறார்கள்.. இங்கே செட்டில்மென்ட்டே பாக்கி நிற்கும்போது, இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது சாத்தியம் தானா..? பூலோகம் என்ன ஆகும்..? விஸ்வரூபம்-2 எப்போ வரும்.. விடை தெரியாத கேள்விகள்.. பதிலுக்காக காத்திருப்போம்..