‘படம் தோல்வி அடைந்தால் டைரக்டர் மீது பழி போடுவதா?’ விக்ரமன் ஆவேசம்!

30004298-a244-4eb8-b8c1-7becb100b0fbOtherImage

மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவை தம்பி தயாரித்துள்ள படம், ‘உயிருக்கு உயிராக.’ இந்த படத்தில் சஞ்சய், சரண், ப்ரீத்தி, நந்தனா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். விஜய மனோஜ்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

விழாவில், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- ‘‘ஒரு படம் வெற்றி பெற்றால் எல்லோரும் அந்த வெற்றியை பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி அடைந்தால், டைரக்டர் மீது பழி போடுகிறார்கள். டைரக்டர் மட்டுமே பொறுப்பு என்கிறார்கள்.

ஒரு படம் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்கு டைரக்டரை மட்டும் குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்? படத்தில் நிறைய செலவு வைத்து விட்டார் என்று தயாரிப்பாளர் குற்றம் சாட்டுவார்.

படப்பிடிப்புக்கு கதாநாயகன் சரியான நேரத்துக்கு வராவிட்டால், ஒரே நாளில் 3 காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கும் டைரக்டரால் ஒரு காட்சியைத் தான் படமாக்க முடியும். அதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகும். படத்தின் செலவும் கூடும். கதாநாயகனை தட்டிக்கேட்க முடியாத தயாரிப்பாளர்கள், டைரக்டர் மீது பழி போடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.