தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயார் அணி வெற்றி!

1185097_3309618636525_1966619790_n

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 2013-2015-ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

இந்த தேர்தலில் மூன்று அணிகள் அதாவது கேயார் தலைமையில் ஒரு அணியும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் இன்னொரு அணியும், சிவசக்தி பாண்டியன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

கேயார் அணியில் தலைவர் பதவிக்கு அவரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் பதவிக்கு டி.சிவா, கே.ஈ.ஞானவேல்ராஜா, பொருளாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

கலைப்புலி எஸ்.தாணு அணியில், தலைவர் பதவிக்கு அவரும், துணைத்தலைவர்கள் பதவிக்கு பவித்ரன், கதிரேசன், செயலாளர்கள் பதவிக்கு சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் பதவிக்கு புஷ்பா கந்தசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

சிவசக்தி பாண்டியன் அணியில், செயலாளர் பதவிக்கு அவரும், துணைத்தலைவர் பதவிக்கு ‘பட்டியல்’ கே.கே.சேகர் போட்டியிட்டனர்.

ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க 800 தயாரிப்பாளர்கள் தகுதி பெற்றிருந்தனர். காலையிலிருந்தே வாக்களித்த வண்ணம் இருந்தனர். முக்கியமாக ரஜினிகாந்த் காலையிலேயே வந்து வாக்களித்து விட்டு சென்றார். மேலும் கமலஹாசன், விஜயகாந்த், மணிரத்னம், பார்த்திபன் ஆகியோரும் வாக்களித்தனர்.

சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெகதீசன், வெங்கட்ராமன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கபட்டது. அதன் முடிவில் கேயார் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார் 449 வாக்குகளும், கலைப்புலி எஸ்.தாணு 252 வாக்குகளும் பெற்றனர். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407, டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதே பதவிக்கு போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். இவர்கள் மூன்று பேரைத் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கே.ஆர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றியை பெற்ற கேயார் மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களும் வெற்றியை சந்தோஷத்தோடு கொண்டாடினர்.