ஜெமினியிடமே திருப்பி கொடுத்த விஷால்!!

vishal

விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர் சி. இயக்கிய படம், ‘மதகஜராஜா.’ ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இந்த படம் முடிவடைந்து 8 மாதங்களாக வெளிவராததால், படத்தை வெளியிட முன்வந்து, ஒரு பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி, தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் விஷால். நேற்று செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருந்தது மத கஜ ராஜா.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ‘‘ஜெமினி நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த 3 படங்களில் வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை சரி செய்த பிறகே படத்தை வெளியிட அனுமதிப்போம்” என்று வினியோகஸ்தர்கள் கூறினார்கள்.

இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சந்தானம் ‘மதகஜராஜா’ படத்துக்காக தன்னிடம் வாங்கிய ரூ.60 லட்சம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை, படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், ‘மதகஜராஜா’ படத்தை வருகிற 10-ந்தேதி வரை வெளியிட தடை விதித்தார்.

‘மதகஜராஜா’ படத்துக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த படத்தை தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் விஷால். தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தந்துவிடுமாறு கூறிவிட்டார்.

வருகிற 13-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ஜெமினி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்தப் படத்துக்காக கடந்த ஒரு மாதமாக பெரும் விளம்பரம் செய்து வந்தார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது