மரியான் – விமர்சனம்!

Mariyan-Movie-stills-07

15 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த பாடலை உருவாக்கிய இரண்டு சாதனையாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம்தான் இந்த மரியான். தேசிய விருது பெற்ற பல கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியிருக்கும் மரியான், சர்வதேச அளவில் நடந்த ஒரு பிரச்சினையை திரைக்கதையாக்கி, படமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்பகுதியில் நீரோடி என்ற கடற்கரை கிராமத்தில் மூச்சு பிடித்து கடலுக்கடியில் சென்று மீன் பிடித்து வரும் தனுஷ், தனுஷை ஒரு தலையாக காதலிக்கும் பார்வதி, தனுஷை வெளிநாட்டுக்கு வேலைக்கு போ என சொல்லும் அம்மா உமா ரியாஸ், தனுஷை பார்வதியோடு சேர்த்துவைக்க நினைக்கும் அப்புக்குட்டி, பார்வதியை அடைய நினைக்கும் விநாயகன் என சில கதாபாத்திரங்களை சுற்றி நிகழ்கிறது படத்தின் முதல் பாதி கதை.

முதல் பாதியில் காதல், நண்பனின் பிரிவு, வில்லனுடன் மோதல் என செல்லும் கதையில் திடீரென ஒரு சூழ்நிலையில் தனுஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல நேர்கிறது. அதாவது பார்வதியை காதலிக்க ஆரம்பித்த நேரத்தில் அவரை பிரியவும் நேரிடுகிறது. எப்படியாவது இரண்டு வருடங்களை ஓட்டிவிட்டு வந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என திட்டமிடுகிறார்கள்.

தனுஷும் கஷ்டப்பட்டு இரண்டு வருடங்கள் வேலை செய்துவிட்டு பார்வதியை பார்க்க போகும் ஆசையில் கிளம்புகிறார். வழியில் தனுஷையும், அவருடன் வேலை செய்யும்  இருவரையும் பணத்துக்காக சூடான் தீவிரவாதிகள் கடத்துகிறார்கள். உங்கள் கம்பெனி பணம் கொடுத்தல் உங்களை விடுவிக்கிறோம் என கண்டிஷன் போடுகிறார்கள். தீவிரவாதிகள் அவர்களை விடுவித்தார்களா? தனுஷ், பார்வதி ஒன்று சேர்ந்தார்களா? என்பது மீதிக்கதை.

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷுக்கு இந்த படம் அடுத்தகட்டம். ஒவ்வொரு பிரேமிலும் அசத்தலான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார். குறிப்பாக நண்பன் இறந்து போகும் சீன், சூடானில் இருந்து கம்பெனி முதலாளிக்கு பதில் பார்வதியிடம் போனில் பேசுவது, வில்லனிடம் சண்டை போடுவது என ஒவ்வொரு காட்சியிலும் அசத்துகிறார். இன்னும் ஒரு தேசிய விருது நிச்சயம்.

தனுஷ் மட்டும் தான் நடிப்பாரா, நானும் நடிப்பேன் என தனுஷுக்கு இணையாக நடிப்பில் நிலைத்து நிற்கிறார் பார்வதி. முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் மிகவும் நெருக்கம் காட்டி நடித்துள்ளார் பார்வதி.

இவர்களை தவிர மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அப்புக்குட்டி, உமா ரியாஸ், சலீம் குமார், ஜகன், விநாயகன், இமான் அண்ணாச்சி என குறைந்த கதாபாத்திரங்கள் நடித்தாலும் நிறைவாக இருக்கிறது.

படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று மார்க் கோனின்க்ஸ்-ன் ஒளிப்பதிவு. நீரோடி கடற்கரை கிராமமாகட்டும், சூடான் பாலைவனமாகட்டும் அனைத்தையும் ரசிக்கும் விதத்தில் வெவ்வேறு கலரில் கொடுத்துள்ளார்.

முக்கிய அம்சம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படத்தோடு பார்க்கும்போது இன்னும் ஒரு படி மேல் இருக்கிறது. பின்னணி இசையில் இதயத்தை உறைய வைக்கிறார்.

தனுஷை வைத்து தங்களின் முதல் படம் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் நல்ல பெயரையும், வெற்றியையுமே பெற்றுள்ளனர். அந்த லிஸ்டில் இணைந்துள்ளார் பரத்பாலா. படம் கொஞ்சம் வேகம் குறைவு தான், ஆனால் இந்த மாதிரி கதைக்கு வேகம் அவசியமல்ல என்பதை ரசிகர்கள் உணர்ந்துவிட்டு படம் பார்க்க வரவேண்டும்.