கொட்டுகிறதா அல்லது பாசத்துக்கு கட்டுப்படுகிறதா? – தேள் விமர்சனம்

கோயம்பேடு மொத்த விற்பனை காய் கனி அங்காடியில் திமிர் வட்டிக்கு தண்டல் கொடுப்பவர் சத்ரு. இந்த பணத்தை வசூல் செய்யும் அடியாள் துரையாக வருகிறார் பிரபுதேவா. பணம் திருப்பித்தர தவறும் நபர்களை துன்புறுத்தி அவர்கள் பணத்தை வசூல் செய்யும் பிரபுதேவாவை கொலை செய்ய பல முயற்சிகள் நடக்கிறது. அதில் அவர் பல நேரங்களில் சண்டை போட்டு காயங்களுடன் தப்பிக்கிறார்.

கொடூரமான துரையையும் அவனுக்கே தெரியாமல் காதலிக்கிறாள் படத்தின் நாயகியான சம்யுக்தா. இப்படிப்பட்ட சூழலில் அனாதையாக இருக்கும் பிரபுதேவாவின் வீட்டுக்கு தான்தான் அவருடைய தாய் என வீட்டுக்குள் நுழைகிறார் ஈஸ்வரி ராவ். தன்னை அனாதையாக போட்டுவிட்டு சென்றதற்காக, ஈஸ்வரி ராவை முதலில் வெறுக்கும் பிரபுதேவா பின்பு தன்னுடைய தாயின் பாசத்திற்கு கட்டுப்படுகிறார்.

தாய் பாசத்தில் முழ்கிய பிரபுதேவா, தண்டல் வசூலிக்கும் தொழிலில் கவனம் செலுத்தாமல் வருகிறார். பிரபுதேவாவின் இந்த போக்கு அவனின் முதலாளி சத்ருவுக்கு வெறுப்பை ஏற்படுத்த, அவரே பண வசூலை செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரபுதேவாவின் தாய் காணாமல் போக, பிறகு அவர் கடத்தப்பட்டுள்ளார் என்று பிரபுதேவாவிற்கு தெரிய வருகிறது. ஈஸ்வரி ராவை கண்டுபிடிக்கிறாரா பிரபுதேவா, தண்டல்காரன் சத்ரு நிலமை என்ன ஆகிறது, தாயை கண்டுபிடிக்க செல்லும் பிரபுதேவா என்னவாகிறார் என்ற பல கேள்விகளுக்கான பதில் படத்தின் மீதி பகுதியில்.

படத்தின் முதல் காட்சியில் வரும் ஒரு நபரின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் காட்சி சில வருடங்களுக்கு முன்பு சினிமா பைனான்சியர் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரை நினைவுபடுத்துகிறது. படத்தில் பணம் வசூல் செய்யும் பிரபுதேவா, பணத்தை சொன்ன தேதியில் திருப்பி தராமல் இழுத்தடிக்கும் நபர்களை பொதுமக்கள் மத்தியிலும், குடும்பத்தினர் மத்தியிலும் அடித்து அசிங்கப்படுத்தி வசூல் செய்யும் காட்சி இதே சினிமாவில் சில பைனான்சியர்களால் நடக்கக்கூடியதை நினைவூட்டுகிறது. மொத்தத்தில் இந்த படத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ள திமிர் வட்டிக்கு பணம் கொடுக்கும் கொடூர பைனான்சியர் செயல்களை நிஜத்தில் அனுபவிக்கிறார்கள் கோயம்பேடு காய் கனி அங்காடி வியாபாரிகள், பல சிறு வியாபாரிகள், சிறு தொழிலாளர்கள் மற்றும் பலர். இப்படிப்பட்ட கொடூர வட்டி வியாபாரம் நடப்பதை நன்கு அறிந்துள்ள அரசு, காவல் துறை, ரிசர்வ் வங்கி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏனோ?

பிரபுதேவா இந்த படத்தில் நடனம் மற்றும் நகைச்சுவை இல்லாமல் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்துள்ளார். சம்யுக்தா நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி ஸ்கோர் செயகிறார். அதுமட்டுமின்றி இளைஞர்களை கவரும் விதத்தில், சம்யுக்தா இரண்டு பாடல்களில் கிளாமராக நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்வரி ராவின் வித்யாசமான கதாபாத்திரம், அவருடைய நடிப்பு இப்படத்தின் மூலம் கண்டிப்பாக பேசப்படும். யோகி பாபு பல காட்சிகளில் வந்தாலும் அவருடைய நகைச்சுவை அளவோடுத்தான் இடம்பெறுகிறது.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு ப்ளஸ். அன்பரிவின் சண்டை காட்சிகள் ஓகே. பொன் பார்திபனின் வசனம் எதார்த்தமாக உள்ளது. சத்தியாவின் பாடல்களுக்கான இசை கேட்கும்படி இருக்கிறது. அதே சமயம் படத்தின் பின்னணி இசையில் சத்தியா சற்று கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பல படங்களில் நடன கலைஞராக வலம் வந்து பின்னர் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் ஹரிக்குமார். ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்து தன்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்தி கொண்டார் இதே ஹரிக்குமார். இந்த “தேள்” திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ஹரிக்குமார்.

படத்தின் காட்சிகளில் உண்மை சம்பவங்கள் தெரிந்தாலும், தேவையான விறுவிறுப்பு மற்றும் வேகம் முற்றிலும் குறைந்துள்ளது. விறுவிறுப்பும், வேகமும் கூடியிருந்தால் இப்படம் பெரியதாக பேசப்பட்டிருக்கும். மொத்தத்தில் இப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய படமாகத்தான் இருக்கிறது.

படத்துக்கான மதிப்பீடு – 2.5/5

Leave a Response