மும்மொழி கொள்கையை ஆதரிக்கவில்லை , இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி..!

மும்மொழி கொள்கையை தான் எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை எனவும், இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

டெல்லியில் சில பத்திரிகையாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் தான் தமிழை பிற மாநிலங்களில் விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டுமென பிரதமருக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக தனது டிவிட்டர் கருத்து திரிக்கப்பட்டதாகவும், டிவிட்டரில் போட்ட போதே இவ்வளவு சர்ச்சை வந்ததால் தான் டிவிட்டரில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதாகவும் அவர் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை தவிர மீதம் 6 பேரை விடுதலை செய்யக்கூடாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்ததாகவும், அதை எதிர்கட்சிகள் ஏன் கேட்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமமுகவில் இருந்து விலகி பலர் அதிமுகவில் இணைந்து வருவதாகக் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வலுவாக உள்ளது என்றார்.

Leave a Response