படுதோல்வி தந்த பாடம்! மீண்டும் இளையராஜாவை தேடிய மிஸ்கின்!

IMG_0571
முகமூடி படத்தை எடுத்துவிட்டு இது ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் என்றெல்லாம் கூறி தேவையில்லாமல் வாங்கி கட்டிகொண்டார் மிஸ்கின். முகமூடி படம் தந்த படுதோல்வி இயக்குனர் மிஸ்கினை மீண்டும் பின்னோக்கி வர வைத்துள்ளது. அதாவது சின்ன பட்ஜெட், தனது வழக்கமான கதை அமைப்பு, இருட்டில் நகரும் கதை என மீண்டும் தனது பாணியை கடைபிடிக்கிறார் இயக்குனர் மிஸ்கின். மேலும் இளையராஜாவிடம் சென்றாலாவது படத்தினை கொஞ்சம் தேற்றலாம் என்ற முடிவில் இளையராஜாவையும் அணுகி படத்திற்கு இசையமைக்க கேட்டிருக்கிறார் மிஸ்கின்.

இதுகுறித்து மிஸ்கின் கூறும்போது, “என் படத்திற்கு இளையராஜாவை அணுக முடிவு செய்து அவரை பார்க்க சென்றேன். முதலில் என்னை பார்த்தவுடன் வெளியே போ என்றுதான் சொன்னார், நந்தலாலா படத்தில் அவரது பாடல்களை உபயோகிக்கவில்லை என்ற வருத்தத்தை உணர்ந்த நான் அதற்கான காரணங்களை சரிவர விளக்கிய பின்னர் ஒரு மூத்த சகோதரர் போல் கேட்டுக் கொண்டார். பின்னர் தயங்கி தயங்கி இப்படத்தில் பாடல் இல்லை என்று சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்தவர் பின்னர் கதையை முழுமையாக கேட்ட பின்னர் முழு சம்மதம் எனச் சொன்னார். இப்படத்தின் முன்னணி இசை தான் படத்தின் பிரதானம் என்று இருவரும் உணர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தின் இயக்குனராக இருப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருப்பதால் சில முடிவுகளை எடுக்க சுதந்திரம் கிடைத்துள்ளது. என்னுடைய நிறுவனமான lone wolf சார்பில் தயாரிக்கப்படும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ உங்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு த்ரில்லெர் படமாகும். பெரும்பகுதி சென்னையை சுற்றி இரவு நேரத்தில் மட்டும் படமாக்கபட்டது. வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து இருந்த ஸ்ரீ இப்படத்தில் பாதிக்கபட்ட கல்லூரி மாணவனாக வாழ்ந்து காட்டி இருக்கிறான் .படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் இறுதியில் இருக்கும்.