வாழ்க்கையை புரிய வைத்த என் இனிய நண்பர் சுந்தர்.சி!

sid

MBA படித்த பட்டதாரி, சினிமா கனவால் மணிரத்னத்திடம் வாயிப்பு தேடி உதவி இயக்குனராக வேலை செய்தவர். பின்னர் முகத்தோற்றத்தால் ஷங்கரிடம் இருந்து அழைப்பு “பாய்ஸ்” படத்தில் நாயகனாக நடிக்க. தொடர்ந்து மணிரத்னத்தின், “ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் அமைய தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார். இந்தியிலும் ரங் தே பசந்தி படத்தில் நடித்தார்.

பின்னர் நீண்டஇடைவெளிக்கு பிறகு “180″ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த சித்தார்த், அதன்பிறகு “காதலில் சொதப்புவது எப்படி”, “உதயம் NH4” படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார். இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி தமிழ் மற்றும் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. இதற்காக அவர் மதுரையில் நடந்து வரும் ஜிகர்தண்டா படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், “நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தீயா வேலை செய்யணும் குமாரு பட ஹிட் போல எனக்கு எந்த படமும் அமையவில்லை. இப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே மிகப்பெரிய வசூலை (10 கோடி ருபாய்) எட்டியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சுந்தர்.சி மிகவும் இனிமையானவர். பொதுவாக எனக்கு அதிக கோபம் வரும். எனது கோபத்தை குறைத்து கூலாக இருக்க அவரும் ஒரு காரணம். வாழ்க்கை என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த நல்ல நண்பர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

தமிழில் நான் அதிகமாக நடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அப்படியல்ல, நல்ல கதைக்காக காத்திருந்து நடிக்கிறேன். அடுத்து தமிழில் நான் 4 படங்களில் நடித்து வருகிறேன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ஜிகர்தண்டா”, வசந்தபாலனின் “காவியத்தலைவன்”, மற்றொன்று எனது சொந்த தயாரிப்பு.

எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் இப்படியே இருக்கும் மனநிலை வேண்டும் என்று கூறிய சித்தார்த்திடம், எப்போது திருமணம் என செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே இடம் கிடையாது என்று உறுதியாக சொன்னார் சித்தார்த்.