இந்தக் கூட்டணி பெண்களை வாழ வைக்கும் கூட்டணி, வெற்றிக் கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த்..!

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து உத்தரமேரூர் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியது:

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படும். விவசாய விளை பொருள்களுக்கு நல்ல விலை நிர்ணயிக்கப்படும். விவசாயம் மேம்பட தென்னிந்திய நதிகள் நிச்சயம் இணைக்கப்படும். அதிமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவேண்டும். இந்த வெற்றிக் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றார் அவர். பிரசாரத்தின் போது, அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், தேமுதிக நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுராந்தகம் பஜார் வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:

அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், இங்கு பழுதாகி உள்ள சாலைகள் புதுப்பிக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ வசதி செய்து தரப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். தலைவர் விஜயகாந்த் நல்ல முறையில் உள்ளார். அவரது பிரசாரம் குறித்து எங்கள் கட்சித் தலைமை அலுவலகம் தெரிவிக்கும். இந்தக் கூட்டணி பெண்களை வாழ வைக்கும் கூட்டணி. இது வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தேமுதிக மாவட்டச் செயலர் ராஜேந்திரன், பாமக மாவட்டச் செயலர் கோபாலக்கண்ணன், மதுராந்தகம் நகர அதிமுக செயலர் வி.ரவி, ஜெயலலிதா பேரவைச் செயலர் எம்.பி.சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Response