குடும்ப ஆதரவில்லாமல் யாரும் சாதிக்க முடியாது : நடிகர் சிவகுமார்..!

தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன்  பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு பத்திரிகையாளர்  அருள்செல்வன் தொகுத்துள்ள  ‘ஞாபகம் வருதே’  நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு  நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .
நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , இந்து தமிழ் உதவி செய்தி ஆசிரியர் மானா பாஸ்கரன் ,
திரைப்பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர்  கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு வந்தவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் தமக்கும் உள்ள நட்புறவு பற்றியும் நூலைப் பற்றியும் கலந்துரையாடினார்கள உரையாடல் நிகழ்வில் நடிகர் சிவகுமார் பேசும் போது ,
” எனக்கு பிலிம் நியூஸ் ஆனந்தனைப் பல ஆண்டுகளாகத் தெரியும் அவருடன் நீண்ட கால நட்பு உண்டு. அவருடன் எவ்வளவோ பேசியிருக்கிறேன்; பழகி இருக்கிறேன் . ஆனால் இந்தப் புத்தகத்தில் எனக்குத் தெரியாத பல தகவல்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆனந்தனின் இளமைக் காலம் பற்றிய தகவல்கள் எனக்கு ஆச்சரியமாகவும் புதியதாகவும் இருந்தன. அவருடைய தாத்தா பேராசிரியராக இருந்தவர் அவரது அப்பா பாலச்சந்தருக்கே மேலதிகாரியாக இருந்தவர்.
 அப்படி ஒரு வளமான வலிமையான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆனந்தன் .
அவரது முன்னோர்கள் சேர்த்து வைத்த வசதியால்தான் அவரால் இவ்வளவு தூரம் சேவை செய்ய முடிந்தது .அவருடைய சேவைக்கு பக்கபலமாக குடும்பமும் இருந்திருக்கிறது. எப்படிப்பட்ட சாதனையாளராக இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் அவர்களால் சாதிக்க முடியாது. அவருடைய பணிகளுக்கு முகம் சுழிக்கக் கூடிய ஒரு மனைவியாக இருந்திருந்தால் அவரால் இந்தச் சேவைகளையும் சாதனைகளையும்  செய்திருக்க முடியாது . குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் எந்த சாதனையாளர்களும் சாதிக்க முடியாது. இதுவே அவரது வாழ்க்கை சொல்லும் பாடம்.
பிலிம்நியூஸ் ஆனந்தன் எவரிடமும் குரல் உயர்த்திப் பேசி வாக்குவாதம் செய்ததை நான் பார்த்ததில்லை. கடைசி வரை சாந்த சொரூபியாகவே வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அவரைப் பற்றி வந்திருக்கும் ‘ஞாபகம் வருதே ‘ என்கிற இந்தநூல் அவரைப் பற்றி அறியாத தகவல்களையும் அனுபவங்களையும் கொடுக்கிறது. இந்த நூலின்  பக்கங்களைப் புரட்டப்  புரட்ட தொகுத்திருக்கும்  அருள் செல்வனின் உழைப்பை உணர முடிகிறது.  வாழ்த்துக்கள்.” இவ்வாறு சிவகுமார் பேசினார்.
 

Leave a Response