விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் : மகன் மீது சத்தியம் செய்த “முதல்வர் குமாரசாமி”..!

என் மகன் மீது சத்தியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் பதவியை விட்டு போக மாட்டேன் என்று முதல்வர் குமாரசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா பாகல்கோட்டையில் நடந்தது. இதில் முதல்வர் குமாரசாமி பங்கேற்று விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கி பேசியதாவது:-

விவசாயிகளை ஏமாற்றுவதாக பா.ஜனதா சொல்கிறது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய திடமான முடிவை எடுத்து உள்ளோம். விவசாயிகளை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். என்னை நம்புங்கள். எனது மகன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், விவசாய கடனை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன்.

எங்களுக்கு பலத்தை கொடுங்கள். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் போக மாட்டேன். கடன் தள்ளுபடிக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

விவசாய கடன் தள்ளுபடியால் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். கடன் தள்ளுபடிக்கு நிதி பற்றாக்குறை இல்லை. தேசிய வங்கி விவசாய கடனையும் தள்ளுபடி செய்து உள்ளேன். தேசிய வங்கிகளில் கடனை 4 தவணைகளில் திரும்ப செலுத்துவோம். வருகிற பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும்.

நான் வட கர்நாடகத்திற்கு எதிரியல்ல. வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வேன். விவசாய திட்டங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

Leave a Response