கஜா புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வாழ் மக்களுக்கு ஒரு லட்சம் காங்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆய்வை தொடங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளும் முதலமைச்சருடன் சென்றனர். முதற்கட்டமாக நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரன் இருப்பு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முகாமில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு அதன் தரத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
நாகை வேதாரண்யத்தில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பின்னர் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார்.
அப்போது முதல்வர் பேசுகையில், “கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 7,886 ஹெட்டேரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மரங்களை அகற்ற டிஎன்பிஎல், மர வியாபாரிகள் மூலம் விவசாயிகளுக்கு அரசு உதவும்.
புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நாட்களுக்குள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். அரசை பொறுத்தவரை எந்தவித தொய்வுமின்றி தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம்.
மத்திய அரசு மனசாட்சிப்படி, மனிதநேயப்படி நிவாரண நிதியை வழங்கும் என்று நம்புகிறோம். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுத்தது. ஆனால், எதிர்பாராத சேதம் ஏற்பட்டுள்ளது. வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட 27 பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது” என்றார்.