பிரதமர் பதவியில் ராஜபக்சே : அதிர்ச்சியில் தமிழர்கள், கொந்தளிப்பில் சிங்களர்கள்..!

இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டு இருப்பது அங்குள்ள மக்கள் இடையே முக்கியமாக தமிழர்கள் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டு அரசியல் மாற்றத்தை புரிந்து கொள்ளும் முன் அங்கு உள்ள கூட்டணி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் இரண்டு முக்கிய கட்சிகள் இலங்கை சுதந்திரா கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியை உருவாக்கியது.

தற்போது அங்கு ஐக்கிய மக்கள் கூட்டணிதான் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி ஆட்சி என்பதால் இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான் , ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று திடீரென உடைந்தது. கருத்து வேறுபாடு காரணமாகவும், அதிகாரப்பகிர்வு காரணமாகும் இவர்கள் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிராக சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கூட கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு தற்போது பிரதமராக சுதந்திரா கட்சியை சேர்ந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறீசேனா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

இது இலங்கையில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக தமிழர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. இலங்கை போரில் தமிழர்களை கொண்டு குவித்த ராஜபக்சே பிரதமர் ஆனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் இதனால் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ராஜபக்சே இருந்த சமயத்தில்தான் அந்நாட்டின் பொருளாதாரம் மோசம் அடைந்தது. இதனால் அவர் மீண்டும் வந்தது அங்கு பெரிய பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

மக்களிடையே கொந்தளிப்பான மனநிலை நிலவுகிறது. கடந்த சில வருடமாக அமைதியாக இருந்த இலங்கை மீண்டும் புயலை ஒன்றை சந்தித்துள்ளது.

Leave a Response