கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் செய்வது பக்ரீத் தியாகத் திருநாளின் அம்சம்-காதர் மொகிதீன்..!

வெள்ளத்தில் மூழ்கி துன்பப்படும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் செய்வது பக்ரீத் தியாகத் திருநாளின் அம்சம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பக்ரீத் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புனித ஹஜ்ஜு பெருநாள், ஈதுல் அல்ஹா, பக்ரீத் பண்டிகை என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளி வாயிலான கஃபாவை உடம்பின் மேலே ஒரு துண்டுடனும், கீழே ஒரு முண்டுடனும் வலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் லட்சோப இலட்சம் ஹாஜிகளுடன் இறை தியானத்தில் ஈடுபடுவதும், புனித ஹஜ் கடமையின் அங்கங்களாகும். இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகமே.

வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும் சமூக கேடுகளை புறந்தள்ளி, மானிடநேய மாண்புக்குரிய மரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பெரும் கஷ்டத்தில் மூழ்கி கொண்டிருக்கிறது. அவதிப்படும் மக்களின் துயர் துடைப்பதும், காலத்தால் செய்யும் கடமையாகும். எல்லோரும் தங்களால் இயன்ற வகையில் எல்லாம் வெள்ள நிவாரணத்திற்கு உதவிகள் புரிவதும் தியாகத்திருநாளின் அம்சமே ஆகும்.

உதவுவோம், துயர் துடைப்போம், மக்களின் நல்வாழ்வுக்கு துணை புரிவோம். அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்” என்று பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.

Leave a Response