பசுமை சாலையை எதிர்த்து வீடு, நிலங்களில் கருப்பு கொடியேற்றி போராட்டம் : பதட்டத்தால் போலீஸ் குவிப்பு..!

எட்டு வழி பசுமைச் சாலை அமையவுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீடு, நிலங்களில்கருப்பு கொடியேற்றிஇந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் – சென்னை இடையே எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமைச் சாலை அமையவுள்ள பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட நார்த்தாம்பூண்டி, பெரிய கிலாம்பாடி, சின்ன கிலாம்பாடி, சி.நம்மியந்தல், ஓரந்தவாடி, ஆழத்தூர், பத்தியவாடி, பாடகம், காம்பட்டு, அணியழக்காம்பட்டு, தென்பள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பெரியகிலாம்பாடி கிராமத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து கருப்பு கொடி ஏந்தி எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிடுகிறோம், பசுமை சாலைக்கான எதிர்ப்பை கைவிட மாட்டோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேபோன்று, பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலக பகுதியில் கருப்பு கொடி ஏற்றிவிட்டு பசுமைச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த வழக்குரைஞர் அபிராமன், வீரபத்திரன், சிவாகுமார், செல்வி, ராமதாஸ் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவலாளர்கள், “கருப்பு கொடி ஏற்றி போராட்டம் செய்வது சட்டப்படி குற்றம், மீறுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அதனை கேட்டுவிட்டு, “பசுமை சாலையை எதிர்த்து போராடுவோம்” என்று முழங்கினர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.

Leave a Response