கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது தாக்குதல்; மீன்களை பிடுங்கிக் கொண்டு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்..!

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியும், மீன்களை பிடுங்கிக் கொண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் 60 நாட்கள் முடிவடைந்ததையொட்டி 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இருந்து ஏராளமானோர் பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.

அதன்படி, சக்திநாதன், சக்திபாலன், கதிரவன், அருண்குமார், ஆறுமுகம், வேதையன், தங்கவேல், சுந்தரம் ஆகிய எட்டு பேரும் இரண்டு பைபர் படகுளில் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஒரு படகில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகுகளை பார்த்ததும் அவர்களை சுற்றி வளைத்தனர்.

கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை வயர்களால் தாக்கினர். மேலும், மீனவர்களின் படகுகளில் இருந்த ஐஸ் கட்டிகளை மீனவர்களின் தலையில் வைத்தும், ஐஸ் கட்டியில் மீனவர்களை அமர வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.

மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து, அவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை அள்ளிக்கொண்டு மீனவர்களை விரட்டிவிட்டனர். வேறு வழியில்லாமல் மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்தனர்.

பின்னர், கடலில் இலங்கை கடற்படையினர் நடத்திய அத்துமீறலால் வேதாரண்யம் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response